பா.உ ஸ்ரீநேசனின் முயற்சியால் மட்டக்களப்பு நூலக கட்டிடத்தை கட்டிமுடிக்க 16.997 கோடி அமைச்சரவை அனுமதி



(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு நகரில் ,கடந்த ஆட்சிக்காலத்தில் பகுதியளவு கட்டப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் பொது நூலக கட்டடம் ஒன்று காணப்படுகிறது. 
இதேவேளை தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு பொது நூலகம் பாரிய இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இந்த பொது நூலக கட்டடத்தை  கட்டி முடித்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்க மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார்.
கடந்த வருடமும் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை பெற பெரும் முயற்சி எடுத்த போதிலும், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் ஆரம்பிக்கப்பட்டிருந்த இக்கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு இறுதி நேரத்தில் தடைப்பட்டது.
எனினும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தனது தனிப்பட்ட தொடர் முயற்சியினால் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்றதோடு , கடந்த ஆகஸ்ட் மாதம் திறைசேரி ஊடாக பிரதம மந்திரி கௌரவ.ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மதிப்பீடுகள் மற்றும் முறையான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார். நூலக கட்டிடத்தினை கட்டி முடிக்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்து கொண்ட கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது அமைச்சின் மூலம் ரூபா.169.97 மில்லியன் (16.997 கோடி) இற்கான அமைச்சரவை பத்திரத்தை, ,அமைச்சரவையின் அனுமத்திக்காக சமர்ப்பித்து இருந்தார். கடந்த 11.09.2018ஆந் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தொகை அமைச்சரவைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு ஒன்று தனது முயற்சியினால் நிறைவேறப்போகிறது என்பதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாகவும் மட்டக்களப்பு மக்களின் உணர்வுகளை மதித்து , நூலக கட்டட தொகுதிக்காக நிதி ஒதுக்கீட்டினை பெற ஒத்துழைத்த திறைசேரி அதிகாரிகள் மற்றும் அனுமதியினை பெற்றுத்தந்த கௌரவ பிரதமர், ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மட்டக்களப்பு மக்களின் சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துக் கொண்டார்.