கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 இந்து ஆலயங்கள் உடைப்பு –வியாழேந்திரன் எம்.பி.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிங்க ஆலயத்தின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாhர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆலயத்தின் சிலைகள் காட்டுமிராண்டித்தனமாக உடைக்கப்பட்டுள்ளது.இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.மற்றைய சமூகங்களுடன் இணைந்து காணப்படும் எல்லை சார்ந்த பகுதிலேயே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

குருக்கள்மடம்,வாகனேரி,பாலையடிதோனா,வாழைச்சேனை,ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்திற்குள் அத்துமீறிவந்து நாசகரிகள் இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளனர்.பொலிஸார் உடனடியாக இது தொடர்பில் கூடுதல் கவனத்தினை செலுத்தவேண்டும்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 11ஆலங்களுக்கு மேல் உடைக்கப்பட்டுள்ளன.ஆனால் இதுவரையில் சரியான குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை.இந்த விடயத்தில் பொலிஸார் சரியாக செயற்படவேண்டும்.இது தொடர்பான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படவேண்டும்.

இந்த நாட்டில் நல்லிணக்கம் என்று பேசிக்குகொண்டு அதனை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டுவருகின்றனர்.நலலிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கி அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் வழிபாட்டு தலங்களை உடைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான சம்பவங்கள்,அத்துமீறிய காணி அபகரிப்புகள்,இனமாற்ற நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.