தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடையே இறால் பண்ணை தொடர்பில் முறுகல்

மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறால் பண்ணையை மீள இயங்குவதற்கு மக்கள் விரும்பாத காரணத்தினால் அவற்றினை நடாத்துவதில் சிக்கல் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆய்வுசெய்தே முடிவினை காணவேண்டும் என மற்றுமொரு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இரண்டு எம்.பிக்களுக்கும் இடையில் இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

கடந்த காலத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு,முதலைக்குடா ஆகியவற்றில் உள்ள இறால் பண்ணைகளினால் குறித்த பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் குடிநீர் உவர்நீராக மாறுவதாகவும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாய அமைப்புகளும் பிரதேச அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.

இது தொடர்பில் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் பல்வேறு தடவைகள் ஆய்வுசெய்யப்பட்டு குறித்த இறால் பண்ணைகளினால் அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதனால் அதனை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு குறித்த இறால் பண்ணைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராசா,சீ.யோகேஸ்வரன் ஆகியோரினதும் பிரதேச பொது அமைப்புகளினாலும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு நடாத்தப்பட்டது.

அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஆய்வாளர்களையும் துறைசார் நிபுணர்களையும் கொண்டு ஆய்வுசெய்ததன் பின்னர் அது மக்களுக்கு பாதகமான விடயம் என்பதனாலேயே குறித்த திட்டத்திற்கு அன்று கடுமையான எதிர்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துவந்தது.

அவ்வாறான நிலையில் மீண்டும் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நேற்றுமுன்தினம் பட்டிப்பளை பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவில் இது தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த நிலையில் அந்த திட்டத்திற்கு பொதுமக்களும் பிரதேச விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

எனினும் அனைத்து திட்டங்களையும் எதிர்த்துக்கொண்டிருக்கமுடியாது,அதற்கான நிபுணர்கள் ஆராய்ந்து அது தொடர்பில் தீர்மாணிக்கவேண்டும் எனவும் சும்மா அரசியலுக்காக கூச்சல்போடமுடியாது எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இதேபோன்றுதான் வாகரைக்கு வந்த இறால் பண்ணையினை எதிர்த்து அது மன்னாருக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பாக இயங்குவதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,இது தொடர்பில் நிபுணர்களாக உள்ளவர்கள் பிரதேச விவசாயிகளும் அப்பகுதியை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களுமேயாகும்.அவர்கள் அது பாதிப்பு என்றுசொன்னால் அது ஏற்றுக்கொள்ளப்படவே வேண்டும்.இவ்வாறுதான் எதனோல் தொழிற்சாலை,புல்லுமலை நீர்ப்போதல் தொழிற்சாலைகளுக்கு நிபுணர்கள் சான்றுகொடுத்துள்ளனர்.தமிழ்நாட்டில் இருந்து வந்த நிபுணர்கள் அதனை பாதிப்பு என்கின்றனர்,இங்குள்ளவர்கள் பாதிப்பில்லை என்கின்றர்.எனவே இங்குள்ள அனுபம்வாய்ந்த விவசாயிகளும் மீனவர்களும் கிராமத்தவர்களுமே அனுபவம் வாய்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

குறித்த விடயத்தினால் குறித்த கூட்டத்தொடரில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.