மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே இடத்தில் சந்திப்பு…


கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கி தமிழ் மக்களின் அதியுச்ச வாக்குகளைப் பெற்று மாகாணசபையில் அதிகூடிய தமிழர் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக அனைத்து தமிழ் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியது.

 அதன் நிமித்தமாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டியதான கலந்துரையாடல் இன்றைய தினம் (22) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடிலில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, டெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு, மற்றும் அதன் குறிக்கோள், தீர்மானங்கள் என்பன கட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன்.

ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளினதும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்துப் பரிமாறல்களின் பின்னர் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரித்து அதன் பிரகாரம் கட்சிகளின் நிலைப்பாடுகளை இனங்கண்டு இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்கின்ற நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாகர்களின் ஒருவரும் இணைப்பாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இச்சந்திப்பு முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணும் முயற்சியாகும் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்பதை மனம் கொண்டால் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணமுடியும். கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும்.

கிழக்குமாகாணத்தில் இன்று நிலவும் களநிலையில் கிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர் முரண்பாடுகளுக்கு அப்பால் கருத்தியல் முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ் ஒரே அணியாகத் திரள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

குறிப்பாக எதிர்வரும் கிழக்குமாகணசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகச் செயற்படவேண்டும் என்பதே கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் தீர்மானமும் கோரிக்கையுமாகும். இதனைச் சாத்தியமாக்கும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே சந்தித்து அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்துள்ளோம். கிழக்குத்தமிழர் ஒன்றியம் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அனைத்துத்தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரே இடத்தில் சந்தித்துப் பேசும் ஏற்பாடே இது. கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கை குறித்து அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் கூடி உடன்பாட்டு ரீதியாக கலந்துரையாடி மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான முன்முயற்சியே இச்சந்திப்பாகும்

இச்சந்திப்புக்கு 12 தமிழ் அரசியற் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம் இதில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற தமிழ் அங்கத்தவர்களும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். கட்சி அரசியலுக்கு அப்பால் இயங்குகின்ற ஒரு அமைப்பாக இது இருக்கின்றது. தற்போது கூடியுள்ள கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான ஒரு உடன்பாடு எட்டப்பட்டு பொதுச் சின்னம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து அடுத்த கட்டமாக பெருந்தேசியக் கட்சிகளில் இருக்கும் தமிழர்களையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட பேச்சுக்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

எனவே கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இணங்கிச்செயற்படுமாறு அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் தலைமைப்பீடங்களுக்குப் பொதுமக்களும் தங்களால் முடிந்தளவில் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.