சமுர்த்தியில் கடன் இழுத்தடிக்கப்படுவதில்லை,அவர்களை ஏமாற்றமுடியாது –பிரதேச செயலாளர் தயாபரன்

சமுர்த்தியில் கடன்பெறுவதற்கு எந்த இழுத்தடிப்பும் நடப்பதில்லை.சமுர்த்தியில் கடன்பெற்றால் ஏமாற்றமுடியாது என்பதனாலேயே அங்கு கடன்பெற செல்ல தயங்குகின்றனர் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்கும் வகையில் கிணறுகளை மூடுவதற்கான வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி,வேலூரில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் இணைந்து இந்த வலைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லடி வேலூர் பல்தேவைக்கட்டிடத்தில் பிரதேச கிராம சேவையாளர் பாக்கியநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள மா.தயாபரன் அவர்களுக்கு பிரதேச மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையேற்றது தொடக்கம் அவர் கலந்துகொள்ளும் முதல்நிகழ்வாகவும் இருந்தது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் மா.தயாபரன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேசத்தில் உள்ள மக்கள் தமது கிணறுகளை மூடுவதற்கான வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் தயாபரன்,
டெங்கு தாக்கம் என்பது மிகவும் கொடிய ஒரு தாக்கமாக நான் கருதுகின்றேன்.நாங்கள் எமது பகுதியை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்தமுடியும்.

டெங்கு தொடர்பான பொதுவான சிரமதான பணிகளில் அனைவரும் பங்குபற்றவேண்டும்.அனைவரும் இணைந்தே இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்தமுடியும்.டெங்கு சிரமதானத்தில் சமுர்;த்தி பயனாளிகள் தங்களது பங்களிப்பினை வழங்கவேண்டும்.அவ்வாறு பங்குபற்றாதவர்களின் சமுர்த்தி உதவியை இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான முழுப்பொறுப்பினையும் சமூகமே கொள்ளவேண்டும்.வெறுமனே அதிகாரிகை மட்டும் குற்றம்சுமத்துவதினால் அதனை கட்டுப்படுத்தமுடியாது.நாங்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமே அதனை கட்டுப்படுத்தமுடியும்.

இன்று நுண்கடன் பிரச்சினைகளால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.நாங்கள் இந்த நுண்கடன் பிரச்சினைக்கு வெறுமனே நுண்கடன் வழங்குபவர்களை மட்டும் குற்றம் சுமத்திவிட்டு இருந்திடமுடியாது.இதற்கான பொறுப்பினை அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.குடும்பங்களில் சரியானமுறையில் கட்டமைக்கள் இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.நுண்கடனை பெறாவிட்டால் நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்காது.அவர்கள் கடனை திணிப்பதில்லை.நாங்களே அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கி;ன்றோம்.

சுகபோக வாழ்வினை அனுபவிக்கவேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறான சிக்கல்களுக்குள் சிக்குகின்றனர்.கடன்களை பெற்று அவற்றினை வீண்விரயம் செய்வதனாலேயே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.

கடன்களைப்பெற்றுக்கொள்பவர்கள் அவற்றினை சிறந்த முறையில் முதலீடாக கொண்டு தொழிலை ஆரம்பிக்கும்போது வாழ்க்கையினை முன்னேற்றிக்கொள்ளமுடியும்.

கிராம சேவையாளர்கள் நுண்கடன் பெறுவதற்காக இருப்பிடத்தினை உறுதிப்படுத்தி தருமாறு கோருபவர்களுக்கு அதனை உறுதிப்படுத்தி வழங்கவேண்டாம் என்ற உத்தரவினை வழங்கியுள்ளேன்.

சமுர்த்தி வங்கி ஊடாக கடன்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.ஆனால் சமுர்த்தி கடனைப்பெற்று அதனை உண்ணுவதற்கும் ஆடம்பரத்திற்கும் செலவு செய்யவதற்கு அனுமதிக்கமுடியாது.முறையான தொழில் ஆரம்பிப்பதற்கான திட்டத்துடன் வருபவர்களுக்கு எவ்வளவு கடன் வழங்குவதற்கும் தயாரக இருக்கின்றேன்.பெறும் கடனை செலுத்துவது உங்கள் கடமையாகும்.

நுண்கடனை பெறுபவர்கள் சமுத்தியில் கடன்பெறுவது காலம் செல்வதாக தெரிவிக்கின்றனர்.அது உண்மையில்லை.சமுர்த்தியில் உள்ளவர்களை ஏமாற்றமுடியாது என்பதற்காகவே அவர்கள் அங்கு செல்கின்றனர்.சமுர்த்தியில் கடன்பெறுவது நீண்டகாலம் செல்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இன்று எவ்வளவோ தொழில்கள் உள்ளபோதிலும் அதனை நாங்கள் செய்வதில்லை.வீட்டில் ஒரு தோட்டத்தினைக்கூட செய்யமுன்வருவதில்லை.ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வீட்டுத்திட்டம் அமைத்து அதில் இருந்து காய்கறிகளை பெறுவதன் ஊடாக சுகாதாரமான உணவினையும் பெற்றுக்கொள்ளமுடிவதுடன் செலவும் மீதப்படுத்தப்படுகின்றது.இன்று அதனை எமது சமூகம் செய்வதில்லையென்றார்.