நுண்கடனை கட்டுப்படுத்த அம்கோர் மேற்கொண்ட முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்கோர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை கட்டுப்படுத்தலும் செயற்றிட்டத்தின் மீளாய்வு கருத்தரங்கும் அனுபவ பகிர்வும் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள தனியார் விடுதியில் அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் அவுஸ்ரேலிய தூதரகத்தின் உயரதிகாரி கஸன்,அம்கோர் நிறுவனத்தின்  தலைமை அதிகாரி ப.முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணியமூர்த்தி,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி எஸ்.பாக்கியராஜா உட்பட உதவி பிரதேச செயலாளர்கள்,கிராம சேவையாளர்கள்,உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

கிராம மட்டத்தில் வாழ்வாதாரம் மற்றும் தொழில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களை நுண்கடன் நிதி நிறுவனங்களில் இருந்து பாதுகாப்பதுடன் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,ஏறாவூர்ப்பற்று,வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

914 குடும்பங்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டு 90 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த குழுக்களுக்கு தலைமைத்துவ பண்புகள்,வாழ்வாதார செயற்பாட்டுக்கான பயிற்சிகள் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் குழுக்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டு அதன் மூலம் கிராம மட்டத்தில் வாழ்வாதார பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2015ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இந்த  ஆண்டுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு குழுக்களும் பல இலட்சம் நிதிகளைக்கொண்டு சூழற்சி அடிப்படையில் நிதிகளை வழங்கி வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இந்த நிகழ்வின்போது நுண்கடன் பாதிப்புகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்பூட்டல் நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் பயனாளிகளின் அனுபவ பகிர்வு அதிதிகளின் கருத்துரைகளும் நடைபெற்றன.