மட்டக்களப்பு – வாகரையில் ஆயுள் வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் கோயில் ஐயர் உட்பட ஐவர் கைது .

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திலுள்ள ஆயுள் வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் மற்றும் கோயில் ஐயர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரையில் கண்டலடி அமைந்துள்ள ஆயுள் வேத வைத்தியசாலைக் கட்டிடத்துக்குள் புதையல் தோண்டப்படுவதாக தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்படி வைத்தியசாலைச் சூழலை சுற்றிவளைத்து சனிக்கிழமை 04.08.2018 அதிகாலை மேற்கொண்ட திடீர் தேடுதலின் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேற்படி அரசாங்க வைத்தியசாலைக் கட்டிடத்தை புதையல் தேடும் நோக்கில் தோண்டி கட்டிடத்தையும் சேதப்படுத்தியதற்காகவும் புதையல் தோண்டியதற்காகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்;ற நீதிவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில்  ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபர்களை ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்படி வைத்தியசாலைக் கட்டிடத்தின் நிலக்கீழ்ப் பகுதியில் இருந்து புதையலைத் தோண்டி எடுப்பதற்கான முயற்சியில் அக்கட்டிடத்தின் உட்பகுதி  பெரியதொரு கிணற்றின் ஆழ அகலத்தில் தோண்டப்பட்டிருந்ததை பொலிஸார் தமது சுற்றிவளைப்பின்போது கண்டு பிடித்தனர்.

வாகரை பொலிஸ் நிலைய கருமங்களுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. கே. பிரசங்க தலைமையில் சென்ற குழுவினர் சந்தேக  நபர்களையும், அங்கு பயன்படுத்தப்பட்டிருந்த  புதையல் தோண்டுவதற்குத் தேவையான உபகரணங்களுடன் அங்கு புதையல்  தோண்டுபவர்களின் பாவனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றையும் கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாகவும் வாகரைப் பிரதேச காடுகளுக்குள் புதையல் தோண்டும் ஏனைய வலைப்பின்னல் தொடர்பானவர்கள் பற்றியும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.