தேடல் கல்வியே சிறந்தது…

தேடல் கல்வியே சிறந்தது…

(பாராளுமன்ற உறுப்பினர் - சீ.யோகேஸ்வரன்)





தேடிப் படிக்கின்ற தண்மை தற்போது எமது சமுதாயத்தில் குறைந்து விட்டது. நுனிப்புல் மேய்வது என்று சொல்லக் கூடிய கல்வி நிலைமைதான் தற்போது இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை பால்சேனையில் வாசிப்பு நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுனிப்புல் மேய்வது என்று சொல்லக் கூடிய கல்வி நிலைமைதான் தற்போது இருக்கின்றது. பரீட்சைக்கான ஒரு படிப்பு அந்த படிப்பைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபெற்றைப் பெற்றுச் செல்லுகின்றோம். ஆனால் பழங்காலத்தில் இருந்த கல்வி நிலை ஆழக் கற்கின்ற படிப்பு. பல நூல்களை வாசித்து அதன் மூலம் பயன்களைப் பெற்றார்கள். அதனால் தான் அந்தக் காலத்தில் பண்டிதர்கள், புலவர்கள் எனப் பலர் விளங்கினார்கள். அந்நிலை தற்போது இல்லை. அனைத்தையும் தேடிப் படிக்கின்ற தண்மை தற்போது எமது சமுதாயத்தில் குறைந்து விட்டது.

வெளிநாடுகளில் தேடல்கள் அதிகமாக இருக்கின்றது. அதனால்தான் பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான தேடல், நூல்களை ஆராய்தல் எங்களிடம் மிகக் குறைவு.

எமது பல வாசிகசாலைகளில் புத்தகங்கள் இன்னமும் புதிதாகவே இருக்கின்றன. எங்களது நூலகங்களில் புத்தகங்களைப் புதிதாக வைப்பதில் எமது மக்கள் மிகவும் கரிசனை கொண்டவர்கள். பயன்படுத்தப்படாவிட்டால் புத்தகம் புதிதாகவே இருக்கும். இந்நிலை மாற வேண்டும். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வாசித்துப் பழுதடைய வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் நாங்கள் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைய நூலகங்களில் தரமான நூல்கள் இருக்கின்ற. ஆனால் அவை பயன்படுத்தப்படுகின்ற வீதம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. கல்வித் திட்டங்களிலும் நாங்கள் அதைத் தான் எதிர்பார்க்கிறோம். சில காலங்களுக்கு முன் ஒப்படைத் திட்டம் என்று கொண்டு வந்தார்கள். அதுவும் தற்போது மறைந்து விட்டது. தேடல் கல்வி தான் சிறந்தது.

மேலை நாடுகளில் இருக்கும் கல்வியெல்லாம் தேடல் கல்வி தற்போது அவ்வாறு அல்ல பரீட்சைக்கான கல்வியே இங்கு இருக்கின்றது. அதில் கேள்வியையும் பதில்களையும் தந்து விடுவார்கள். இதனால் தேடல் கல்வி எங்களிடம் இல்லை. ஆனால் மேலை நாடுகளில் கல்வியைத் தேடிக் கற்கின்றார்கள். பல புத்தகங்களை வாசித்த பின்புதான் அங்கெல்லாம் பரீட்சை எழுத முடியும். இந்த நிலையை எமது நாட்டிலும் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்ட வரப்படும் போது தான் நூலகங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறு இல்லாவிடில் புதுப் புத்தகங்களாகவே நூலகங்கள் இருந்து கொண்டிருக்கும்.