(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)
பாடசாலைகள் புள்ளி பெறுவதற்காகவும், ஏதோவொரு தொழிலைப் பெறும் அளவிற்கு மாத்திரம் தான் கொண்டு செல்லும். அதற்கு மேலேயான மனிதத் தண்மையை வளர்க்கின்ற விடயமாகப் புத்தகங்களும், வாசிகசாலைகளுமே விளங்குகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வாகரை பால்சேனையில் வாசிப்பு நிலையம் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எழுத்து விகைளை எமது சிறுவர்களின் இதயத்திலே தூவுவதற்காகவே எமது பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் வழக்கமான அபிவிருத்திகளுக்கு அப்பால் மனித மனங்களை அபிவிருத்தி செய்கின்ற இந்த வாசிகசாலையைத் ஆரம்பிக்கின்ற ஒரு செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
ஒரு வாசிகசாலையின் மூலம் மனித மனங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனிதனுடைய விலங்குத் தண்மைகள் மெல்ல மெல்ல அழிந்து மனிதன் மானுடன் என்கின்ற உயர்ந்த தண்மையை அடைகின்றான்.
மாணவர்கள் புள்ளிகளைப் பெறுவதற்காகப் படிக்கின்றமை கல்வி அறிவு, இந்த அறிவின் மூலம் வேலை செய்வதற்குரிய திறனைப் பெறுகின்றோம். அதற்கு அடுத்தபடி மனப்பாங்கு, இது சிறப்புற வளருமானால் பலவித குற்றச்செயல்கள் இல்லாதொழியும். எனவே மனப்பாங்கை வளர்க்கின்ற ஒரு விடயமாக இந்த வாசிகசாலைகள் அமைகின்றன. பாடசாலைகள் புள்ளி பெறுவதற்காகவும், ஏதோவொரு தொழிலைப் பெறும் அளவிற்கு மாத்திரம் தான் கொண்டு செல்லும். அதற்கு மேலேயான மனிதத் தண்மையை வளர்க்கின்ற விடயமாகப் புத்தகங்களும், வாசிகசாலைகளுமே விளங்குகின்றன.
நூல்களைத் தேடித் தேடிப் படிக்க வேண்டும். உணவை நாம் ஓரளவிற்குத் தான் உண்ண முடியும். ஆனால் படிப்பு என்பது அவ்வாறு அல்ல. படிக்கப் படிக்க இன்னும் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் வரும். அவ்வாறு படித்தவர்கள் தான் இன்னொருவருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மாணவர்கள் அவர்களின் பாட விடயங்களுக்கு மேலாக நூல் நிலையங்களுக்குச் சென்றும் வாசிக்கும் திறனை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.