மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மூன்றாம் நாள் திருவிழா –சிறப்பாக நடைபெற்ற சப்புர திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சப்புரத்திருவிழா நேற்று இரவு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

நேற்று இரவு மூன்றாம் தின பூஜையானது மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு,பொதுச்சந்தை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பட்டு கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தம்ப பூஜையுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது.

பூஜையினை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றதுடன் சுவாமி முத்துச்சப்புரத்தில் வெளிவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

பிள்ளையார்,சிவன்பார்வதி,வள்ளிதெய்வானை சமேதராக முருகப்பெருமான் மூன்று சப்புரங்களில் வலம்வந்ததை கண்கொள்ளா கட்சியாக இருந்தது.

நேற்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

உற்சவத்தினை தொடர்ந்து சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர்களின் இசைக்கச்சேரியும் நடைபெற்றன.