மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள்...





மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள்...

(பாராளுமன்ற உறுப்பினர் - ஞா.ஸ்ரீநேசன்)

தமது முயற்சியின் மூலம் நிதி அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 மில்லியன் ரூபா செலவில் பதினொரு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பொருளாதார இராஜாங்க  அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையினை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்துவதெற்கென தெரிவு செய்யப்பட்ட பதினொரு கருத்திட்டங்களுக்கு இருபத்தெட்டு மில்லியன் ரூபா, நிதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் இந் நிதி ஒதுக்கீடுகள் மாவட்டச் செயலகத்தின் மூலம் குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கென அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நரிப்புல்தோட்டம் - பங்குடாவெளி துறையினை சென்றடையும் ஆற்றோர பங்குடாவெளி வீதி, வவுணதீவு பத்தரைக்கட்டை விவசாய வீதி, கரவெட்டி மயான வீதி, முனைத்தீவு மணல் வீதி, கிரான் கட்டப்பாடு வீதி, களுதாவளை கொம்புச்சந்தி வீதி ஆகிய வீதிகள் தலா இரண்டு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கவும், நரிப்புல் தோட்டம், மகிழவட்டுவான், கற்குடா கிராமங்களின் விடுபட்ட வீதிகளுக்கு குடிநீர் குழாய்களை பதிக்க பத்து மில்லியன் ரூபாவும் குறிஞ்சாமுனை உவர் நீர் தடுப்பு அணைக்கட்டு, பங்குடாவெளி விளையாட்டு மைதானம் இருதயபுரம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை புனரமைக்க தலா இரண்டு மில்லியன் ரூபாவும்  ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமது அலுவலகத்தில் பதுளை வீதி மக்களுக்கு குடிநீர் வழங்கல் தொடர்பாக அப்பிரதேச மக்களுடனான சந்தித்த போதே இவ்விடயங்கள் தொடர்பில் தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், தாம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக கட்சியுடன் இணைந்து பயணிக்கும் அதே வேளையில் தன்னை தெரிவு செய்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காகவும் அமைச்சுக்களுக்குச் சென்று திட்டங்களை முன்வைப்பதோடு மாவட்டத்திற்கு வரும் அமைச்சர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்து நிதி ஏற்பாடுகளை பெற்று அதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.