கல்லடி பாலக்காணியை அபகரிக்க முயன்றவர்களினால் பரபரப்பு –ஒருவர் கைது

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இது தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக அரச காணியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஒரு காணிக்குள் வந்தவர்கள் குறித்த காணிக்குள் வேலி அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அங்குவந்த கிராமசேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் மற்றும் கிராமத்தினை சேர்ந்தவர்கள் இணைந்து வேலி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

கிராமசேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் மேற்கொண்ட விரைவான நடவடிக்கை காரணமாக குறித்த காணியை வாங்குவதற்கு வந்த கொழும்பினை சேர்ந்த மாற்று இனத்தவர்கள் அங்கிருந்து நழுவிச்சென்றுள்ளர்.

அந்த பகுதியூடாகவே மழை காலங்களில் காத்தான்குடி தொடக்கம் பல பகுதிகளின் வெள்ளநீர் நீர் வழிந்து மட்டக்களப்பு வாவிக்குள் செல்வதாகவும் குறித்த பகுதியை அபகரிக்கும் நிலையில் போலி ஆவணங்களை கொண்டுவந்த குறித்த பகுதியை ஆக்கிமிக்க முற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த காணியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியென அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பாதகையினை உடைத்துவிட்டு குறித்த காணியை வேலியிட சிலர் முயற்சித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் நடைபெற்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்தும் நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

குறித்த காணி அரச காணியெனவும் அதற்கான அறிவித்தல் பலகை நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்ததாகவு பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் தெரிவித்தார்.

இந்த காணியின் ஊடாக பல இடங்களின் வெள்ள நீர்கள் காலம்காலமாக வடிந்துசெல்வதாகவும் இதனை அடைத்தால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உhயி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

குறித்த காணி மழை காலங்களில் நீர் வழிந்தோடும் பகுதியாக காணப்படுவதனால் அதனை அத்துமீறி பிடிக்கமுற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது துணிச்சலுடன் செயற்பட்ட குறித்த பகுதி கிராமசேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தனின் விரைவான நடவடிக்கைக்கு தனது பாராட்டத்தினை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.