வடமாகாண சபையின் தவிசாளரே கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!


அண்மையில் இம்பெற்ற தமிழ் மக்களின் இரத்தகறைபடிந்த  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்க்காக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ரூபா 7000.00 நிதி வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வு நிறைவுபெற்ற கையோடு வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தான் வழங்கிய நிதியை திரும்பித்தருமாறு வடமாகாண சபையின் அமர்வொன்றின் போது கேட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்க் கட்சி தலைவரின் பணத்தை திருப்பிகொடுக்க கிழக்கில் ஏழாயிரம் பேரிடம் ஒருவர்க்கு ஒரு ரூபாய் வீதம் உண்டியல் குலுக்கி சேகரித்து கொண்டனர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியை உரியவரிடம் சேர்ப்பிக்க வடக்கு மாகாண சபை தவிசாளரிடம் கோரிக்கை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோள் !

"கிழக்கிலிருந்து தலா ஒரு ரூபா வீதம் அளித்த நாளாந்த உழைப்பாளிகள், வணிகர்கள்,மாணவர்கள், முஸ்லீம் பொதுமக்கள் ஆகிய எங்கள் ஏழாயிரம் பேரினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்" என கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தினர்  வடமாகாண சபையின் தவிசாளர் சி .வி .கே சிவஞானத்திடம்   வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னிடம் அறவிடப்பட்ட ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு  வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக மனம் வெதும்பிய கிழக்கு மாகாண மக்களிடம் சேகரித்த பணத்தை தம்மிடமிருந்து கையேற்று திரு. தவராஜாவிடம் ஒப்படைக்குமாறு திரு. சி. வி. கே. சிவஞானத்திடம் விடுத்த வேண்டுகோளின் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந் நிதி சேகரிப்பினை வடகிழக்கின் இணைப்புப் பாலமாக நாம் கருதுவதாகவும் தமது தேசிய உணர்வினை வெளிப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஒன்றியத் செயலர்  T. பவித்ராஜின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட இவ் வேண்டுகோளின் முழு விபரமும் பின்வருமாறு.


திரு. சி. வி.கே . சிவஞானம்
அவைத்தலைவர்
வடமாகாணசபை
அவர்கட்கு
ஐயா !

வணக்கம்!

மே18  தமிழினப் படுகொலை நாளுக்கென வடமாகாணசபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஏழாயிரம் ரூபாவில் தன்னுடைய  பங்கான  ஏழாயிரம் ரூபாவையும் திருப்பி வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராஜா விடுத்த வேண்டுகோள் குறித்து அதிர்ச்சி அடைந்தோம்.

 எங்களது பெற்றோரும், உறவினரும் பட்ட வேதனைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மே 18  என்பது தனியே முள்ளிவாய்க்காலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.

சம்பூர் தொடங்கி வாகரை வழியாகவும் பின்னர் மடு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்ட ஒரு இன அழிப்பினை நினைவு கூருவதாகும்.

 இதற்கும் மேலாக மொத்தமாகத்  தமிழினப் படுகொலையின் குறியீட்டு நாளாகவும் அமைந்துள்ளது.


இவ்வருட நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச்  செயற்படுத்த  வடக்கு முதல்வர் தங்களை வேண்டியிருந்ததையும், உச்சக் கட்டப்  பொறுமையுடன் அவற்றைத் தாங்கள் நடத்தி முடித்ததையும் நாம் அறிவோம்.

போக்குவரத்து, குடிநீர், பந்தல், தீபங்கள் உட்பட சகல விடயங்களையும் தாங்கள் சிரத்தையுடன் கவனித்ததையும்,  எங்கள் சகோதரர்களான யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் அரவணைத்துச்  செயற்பட்டதையும்  நாம் அறிவோம்.


எங்களது பெற்றோரின் மனக்குறையைப் போக்கவும்,தமிழ்த் தேசிய உணர்வு வடகிழக்கு இரண்டு மாகாணங்களுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கவும் ஏழாயிரம் பேரிடம் தலா ஒரு ரூபா வீதம் நிதி சேகரித்துள்ளோம்.

 வடகிழக்கின் இணைப்புப் பாலமாக இந் நடவடிக்கையினை நாம் கருதுகிறோம்.

சபை முதல்வர் என்ற வகையிலும், இவ்வருட மே 18 நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தியவர்  என்ற முறையிலும் இதனைத் தங்கள் மூலம் குறிப்பிட்ட பிரமுகரிடம் சேர்ப்பிப்பதே முறையானது என நாம் கருதுகிறோம்.

கிழக்கிலிருந்து தலா ஒரு ரூபா வீதம் அளித்த நாளாந்த  உழைப்பாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், முஸ்லீம் பொதுமக்கள், ஆகிய எங்கள் ஏழாயிரம் பேரினதும்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து எமது வேண்டுகோளின் பிரகாரம் இந் நிதியைப் பெற்று சி.தவராஜா விடம் ஒப்படைக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.


நாங்கள் வயதில் சிறியவர்கள். அதிகப் பிரசங்கத்தனமாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். தமிழக சட்டசபையில் திரு. தமிழ்க்குடிமகன் சபாநாயகராக இருந்த போது திருக்குறள் ஒன்றைச் சொல்லி அதன் பொருள் விளக்கத்தையும் சொன்னார் என எமது பெற்றோர் மூலம் அறிந்தோம்.

 இது ஒரு நல்ல நடைமுறை. தங்கள் மாகாண சபையிலும்  இதனை நடைமுறைப் படுத்தினால் நல்லது எனக் கருதுகிறோம்.      

எமது அபிப்பிராயத்தை மதிப்பீர்கள் எனக் கருதுகிறோம். அவ்வாறாகின் பின் வரும் திருக்குறளை முதன் முதலாகச்  சொல்வது நல்லது எனக் கருதுகிறோம்.    

 " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு“

நன்றி