உள்ளூராட்சி சபை  உறுப்பினர்களுக்கும் எங்களுக்கும் பாரிய இடைவெளியும் வேறுபாடுமுண்டு.

(சசி துறையூர்)

இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கத்தின் இளைஞர் வலையமைப்பின் தலைவரும், அதன்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும்,
இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சரும்,
மட்/வந்தாறுமூலை மகா வித்தியாலய விஞ்ஞான பட்டதாரி ஆசிரியருமான மனோகரன் சுரேஸ்காந் அவர்களுடனான நேர்காணல்.


கே :- சுரேஸ்காந் உங்களது சுருக்கமான அறிமுகம் தரமுடியுமா?

ப:-   ஆம் முதலில் மட்டு நியூஸ் செய்தி சேவைக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் , மட்டக்களப்பு மாவட்டத்தில் இணையத்தள செய்தி சேவையில் தனி இடத்தினை தக்கவைத்துள்ள மட்டுநியூஸ் செய்தித் தளம் இன்னும் சிறப்பான சேவையினை தமிழ் பேசும் சமூகத்திற்கு வழங்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மனோகரன் சுரேஸ்காந்தன், கரடியனாறு கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன்.

எனது முன்பள்ளிப்பருவத்தை அமெரிக்கன் மிஷன் பாலா் பாடசாலையிலும்,  க.பொ.த. சாதாரன தரம் வரை  மட்/கரடியனாறு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று,  பின் சாதாரன தர சித்தியின் பின் போர் சூழல் காரணமாக எனது உயர் தர கல்வியை கல்லடியில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்தி சங்கத்திலிருந்து கொண்டு சிவானந்தா தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று 2010 ஆம் ஆண்டு பல்கலை கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

2010 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீட மாணவனாக இணைந்து 2015 ஆம் ஆண்டு உயிரியல் விஞ்ஞான பட்டதாரியாக பட்டம் பெற்று பின்  கிழக்கு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீட, விலங்கியல் துறையில் செயன்முறை ஆசிரியராக (Demonstrator) சிறிது காலம் பணிபுரிந்தேன்.

தற்போது இலங்கை திறந்த பல்கலை கழகத்தில் சட்டமானி பாடநெறியினையும் பகுதிநேரமாக  தொடர்ந்து வருகின்றேன்.


தற்போது எனது சொந்த கிராமத்தில் வசித்து வருவதுடன் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து என்னால் முடிந்தளவிலான சமூகப்பணிகளையும் செய்து வருகின்றேன்.



கே :-  இளைஞர் பாராளுமன்ற பிரவேசம் /பிரதிநிதித்துவம் தொடர்பாக குறிப்பிட முடியுமா?


ப :- எனது சமூகத்தின் மீதான ஈடுபாடு எனது 12 வயதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.
சிறு வயதிலிருந்தே என்னை ஆலய பணிகளில் ஈடுபடுத்தி கொண்டேன்.

உயா்தர பரீட்சையின் பின்னர் 2009 ஆம் ஆண்டு எனது நண்பர்களுடன் இணைந்து இளைஞா் கழகம் ஒன்றினை ஆரம்பித்து 2012 வரை செயலாளராகவும் பின் தலைவராகவும் எனது சமூகப்பணியினை தொடர்ந்தேன்.

பின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுாடாக பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் இளைஞர் கழக சம்மேளனங்களில் பதவி வகித்ததுடன் என்னால் முடிந்த சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க கல்குடா தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு இலங்கையில் அதிகூடிய விருப்பு வாக்குகளை  பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின் பாராளுமன்றத்தினுள் இடம்பெற்ற பரீட்சை மற்றும் நோ்முகத் தேர்விலும் சித்தியடைந்து பாராளுமன்றத்திலுள்ள பத்து அமைச்சர்களில் ஒரே ஒரு தமிழ் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டு, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் அமைச்சுக்கான அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டேன்.

கே : - இளைஞர்பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட முடியுமா?

ப :- இளைஞர் பாராளுமன்றாமானது தேசிய பாராளுமன்றத்திற்கு ஒப்பானதாக காணப்படுவதுடன் பிரதமர் அதிகாரம் கொண்டவராகவும் பத்து அமைச்சுக்களையும் அவற்றுக்கான அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் கொண்டு காணப்படுகின்றது.

பாராளுமன்ற அமா்வு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறுவதுடன் இலங்கை இளைஞர்களின் பிரச்சனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான சிறந்த களமாக காணப்படுவதுடன் முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் கன்சாட்டின் ஊடக தேசிய பாராளுமன்றம் தொடர்பான அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

அத்தோடு எமது அமர்வுகள் நடைபெறும் போது உள்நாட்டு வெளிநாட்டு முக்கிய பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொள்வதுடன், விசேட உரைகளையும் நிகழ்த்துவர்.

குறிப்பாக கடந்த காலங்களில்  ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை செயலாளர் நவனீதம்பிள்ளை.
ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவராக பதவி வகித்த போதும், தற்போது பிரதமராக பதவி வகிக்கின்ற போதும், முன்னால் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழக பெரும, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, நிரோசன் பெரேரா, விஜய தாச ராஜபக்ச, பாட்டாலி சம்பிக்க ரனவக்க, டிலான் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபவன், தேர்தல்கள் ஆனையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய, இந்திய இளைஞர் பிரதிநிதிகள்,
உலக பெண்கள் அமைப்பின் தலைவி அவுஸ்திரலியா. போன்ற பல பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Youth with talent எனும் ஊருக்கு ஒரு கோடி அபிவிருத்தி செயற்றிட்டமும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது இங்கு குறிப்பிடத்தக்கது.


கே:- கல்வி அமைச்சராக உங்களது செயற்பாடு?

ப:- எனது அமைச்சினுடாக சில அமைச்சு செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றேன், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் சிறுவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்குகளை நாடத்தியிருந்தோன்.

எதிர் வரும் 05.06.2018 அன்று குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பிரதேசத்தில் க.பொ.த சாதாரன மற்றும் உயர் தரத்தினை நிறைவு செய்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினை நாடத்த இருக்கின்றோம்.

அதே போன்று மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டத்தில் தரம் 5 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கினை நடாத்த திட்டமிட்டிருக்கின்றேன்.

Youth with talent செயற்றித்திட்டத்தினுாடாக போரால் பாதிக்கப்பட்ட கிராமமான கரடியனாறு கிராமத்தில் நுாலகம் ஒன்றினை அமைத்ததுடன் சிறு வீதிகளையும் புணரமைப்பு செய்திருக்கின்றேன்.

மேலும் செய்ய வேண்டிய எண்ணமிருந்தாலும் நிதியை தேடிக்கொள்வதில் பல சிரமங்கள் காணப்படுகின்றன.

எமது பாரளுமன்றத்தினுாடாக நிதி ஒதுக்கீடுகள் இன்மையால் செயற்றிட்டங்களுக்கு நாமாகவே நிதிகளை தேடிக்கொள்ள வேண்டிய  சூழல் காணப்படுகின்றது.

ஒவ்வொரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தன்னார்வ தொண்டராகவே செயற்பட்டு வருகின்றார்.


கே:- இலங்கை இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக அதன் முன்னோற்றம் தொடர்பாக  குறிப்பிட முடியுமா?

அது தொடர்பாக நீங்க ஒரு இளைஞனாக திருப்தி அடைகின்றீரா?

ப:- ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் இளைஞர் அபிவிருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் முன்னேற்றமடைந்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம்தான் இளைஞர் பாராளுமன்றம்.

இருந்தாலும் கூட தற்போதய உலகமயமாதலுக்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

எமது நாடு கல்வியறிவு மட்டத்தில் உயர் நிலையிலிருந்தாலும் கூட அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை போன்று தொழில் சந்தையின் கேள்விகளுக்கேற்ப தொழில் படையை உருவாக்குகின்றோமா என்றால் போதாது என்பதே பதில்.

இன்றைய வேலையில்லா பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஏனைய பல நாடுகளில் பல்கலைக்கழக மாணவா்கள் பகுதிநேர தொழில்களில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

ஆனால் எமது நாட்டில் அவ்வாறான சூழல் இல்லை. இவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்படும் போது தங்கி வாழ்வோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அபிவிருத்தியில் முன்னோக்கி செல்ல முடியும்.

எனவே உலக தரத்திலான இளைஞர் யுவதிகளை உருவாக்குவதற்கு மேலும் முனைப்பான இளைஞர் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

கே :-  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொடர்பாக?

ப :- தெற்காசியாவில் பலம்மிக்க இளைஞர் வலையமைப்பைக் கொண்ட நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிறுவனமாக இலங்கை  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திகழ்கின்றது.

உண்மையில் தேசிய இளைஞா் சேவைகள் மன்றமானது இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

தேசிய இளைஞா் சேவைகள் மன்றமானது பல இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இளைஞர் பாராளுமன்றம்
Youth with talent செயற்றிட்டம்
யொவுன் புர தேசிய வேலைத்திட்டம்
சர்வதுதேச இளைஞா் பரிமாற்ற வேலைத்திட்டம்
பிரதேச மட்டத்திலான இளைஞர் முகாம்கள்
தேசிய விளையாட்டு விழா
தேசிய கலாசார நிகழ்வுகள்.
இவ்வாறு இருபதிற்கு மேற்பட்ட பெரியளவிலான இளைஞர்அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.



கே:-  உங்களால்  இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினூடாக உங்களுக்கு வாக்களித்த இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடிகிறதா?

ப:- எதிர்பார்த்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை காரணம் இளைஞர் பாராளுமன்றத்தினுாடக நிதி ஒதுக்கீடுகள் இல்லை.

நாங்களாகவே நிதியினை வேலைத்திட்டங்களுக்கு தேடிக்கொள்ள வேண்டியுள்ளது. 

இது இலகுவான பணியாக அமையவில்லை. வெறுமனே வழிகாட்டல்களை மாத்திரமே செய்யகூடியதாகவுள்ளது.

எதிவரும் காலங்களில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுமாயின் சிறந்ததாக அமையும் என்பது மாத்திரம் உண்மை.

கே : - சுரேஸ் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்க்காக உங்களுக்கான அழைப்புக்கள் வந்ததாக நான் அறிகிறேன்? 


ஆம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்தும் அழைப்பு வந்திருந்தது.  அப்போதைய எனது தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக அழைப்பினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கே :- உங்களது இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக  எதிர்கால திட்டம்?

இளைஞர் அபிவிருத்தியில் முடிந்தளவு பங்களிப்பு செய்வதே நோக்கமாக காணப்படுகின்றது.

அதற்காக இளைஞர் வலையமைப்புக்களை கட்டமைத்து வருகின்றேன். 

கல்வியிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்றிருக்கும் போரால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு விழிப்புணா்வுகளை நடாத்த திட்டமிட்டிருக்கின்றோம் .

கே :- ஜ.நா வின் விசேட குழு ஒன்றின் பிரதிநியாக நீங்க செயற்படுகின்றீர் இல்லையா?

ப :- ஆம்


கே:- சுரேஸ் உங்களது  ஜக்கிய நாடுகள் சபையின் இளைஞர் அபிவிருத்திசார் கற்கைகள் மற்றும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட முடியுமா? 


ப:- நிச்சயமாக , ஐக்கிய நாடுகளின் இலங்கை வலையமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதால் சர்வதேச தொடா்புகள் கற்கை நெறியினை தொடர்வதற்கு நிச்சயித்திருக்கின்றேன்.

ஐ.நா வினால் 2030 ஆண்டளவில் அடைய நிச்சியிக்கப்பட்டுள்ள நிலையான அபிவிருத்தி இலக்குகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் செயற்படும் ஐ.நா வின் இணை நிறுவனமான இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான இளைஞர் வலையமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காக பதின்நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்பட்டு வரும் இளைஞர் வலையமைப்புக்களுக்கு தலைவராகவும் மாவட்ட இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றேன்

கே:- சுரேஸ் அண்மையில் மட்டக்களப்பு நகரில் நீங்கள் ஒர் இளைஞர் மகாநாடு ஒன்றை நடத்தியதாக அறிய முடிகிறது அதுதொடர்பாக குறிப்பிட முடியுமா?

ப:- ஐ.நா வினால் 2030 ஆண்டளவில் அடைய நிச்சியிக்கப்பட்டுள்ள நிலையான அபிவிருத்தி இலக்குகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான இளைஞர் வலையமைப்பு உருவாக்கப்பட்டது. 

ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இணைப்பாளர் உட்பட்ட 21 இளைஞர்களை கொண்டதாக இவ் வலையமைப்பு காணப்படுகின்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் 14 பிரதேச பிரிவுகளிலும் இயங்கி வருகின்ற 294 உறுப்பினர்களுக்கும் நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட நிலையான அபிவிருத்தி இலக்கு  இளைஞர் மாநாடு எனும் தலைப்பில் இவ்வலையமைப்புக்களுக்கான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் YMCA மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மாவட்ட  தலைவர் உட்பட 14  பிரதேச இணைப்பாளர்களுக்கும் சேவைப் பாராட்டு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் 294 உறுப்பினர்களுக்கும் நியமன சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


கே :- இன்றைய இளைஞர்களுக்கு ஏதாவது குறிப்பிடவிரும்புகிறீரா?

ப :- சில சமயங்களில் தான் சந்தர்ப்பங்கள் அமையும் பல சந்தர்ப்பங்களில் நாமாக சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். 

எனவே இளைஞர் யுவதிகள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி தமது தலைமைத்துவத்தினை வளர்த்து கொள்வதுடன் துடிப்பான ஒரு இளைஞர் சமூதாயத்தினை உருவாக்கி பல வழிகளில் நலி வடைந்து வரும் எமது சமூகத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். 


கே :-  இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல், தெரிவு , பிரதிநிதித்துவம்,  அதே போன்று உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தேர்தல், தெரிவு , பிரதிநிதித்துவம், தொடர்பாக நீங்கள்  என்ன கருதுகிறீர்கள்? 


   ப:-   நிச்சயமாக நல்லதொரு கேள்வி, 

உள்ளூராட்சி சபை  உறுப்பினர்களுக்கும் எங்களுக்கும் பாரிய இடைவெளியும் வேறுபாடுமுண்டு. 

பொதுவாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிவாரியாக இடம்பெற்ற  தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளால் வெற்றிபெற்றவர்கள். 

இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒரு தொகுதிக்கு ஒருவர் என்ற வகையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். 

ஆனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் குறித்த குறுகிய வட்டாரத்துக்குள் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், அவர்களுக்கு அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு, கொடுப்பனவு  என்பன உண்டு. 

ஆனால் எங்களுக்கு இல்லை. உண்மையில் தொகுதி பெரிதா? வட்டாரம் பெரிதா? என்பதையும், தேர்தலில் எங்கு போட்டி அதிகம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது.

தொகுதி ஒன்றில் எந்த அரசியல் கட்சியினதும் அரசியல் வாதிகளினதும் சார்போ ஒத்துழைப்போ இல்லாது, வெறுமனே இளைஞர் கழகங்களினூடாக செய்யப்படும் தொண்டர் வேலைத்திட்டம், மற்றும் அறிமுகம் ஒன்றையே  மூலதனமாக கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டியுள்ளது. 

கல்குடா தொகுதியிலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 90 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஆனால் ஒருவர் தான் இத்தொகுதியை இளைஞர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் . 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடு, கொடுப்பனவுகள் எமக்கு வழங்கப்படுவதில்லை, இது  பாரிய குறைபாடாக காணப்படுகின்றது. 

இது தொடர்பாக எமது பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தோம் இருந்தும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட வில்லை. 

இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என மேடைகளில் பேசும் அரசியல் தலைவர்களும் அரசும் இளைஞர்களுக்கு சரியான சந்தா்ப்பத்தை வழங்க தவறியுள்ளனர். 

எனவே எதிர்வரும் காலங்களில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இதன் மூலம் நாகரிகமான அரசியல் கலாச்சாரத்தையும், ஆற்றல் மிக்க சிறந்த இளம் அரசியல் தலைவர்களையும் ஒவ்வொரு தொகுதியிலும்,  நாடு பூராகவும் உருவாக்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.