றெஜினாவுக்கு நீதிகேட்டு வீதியில் இறங்கிய மட்டக்களப்பு சிறுவர்கள்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல்துஸ்பிரயோகங்களுக்கு எதிராக உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் படுகொலையினை கண்டித்து மட்டக்களப்பு செங்கலடியில் இன்று சனிக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்;டம் நடைபெற்றது.

முற்போக்கு இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள்,மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட சிறுமிக்க நீதி வழங்குமாறு கோரியும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்குமாறு கோரியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

“வேண்டும்,வேண்டும் நீதிவேண்டும்,றெஜினாவின் கொலைக்கு நீதிவேண்டும், அரசே குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கவும்,நல்லாட்சி அரசாங்கத்தில் காவல்துறை தூங்குகின்றதா,அரசே!சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.