மட்டக்களப்பு நகரை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மத்திய கல்லூரி மாணவர்கள் - ஏனையவர்களுக்கு முன்மாதிரி

இலங்கையின் முதல் ஆங்கிலப்பாடசாலையென்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 204வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரினை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று காலை நடைபெற்றது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சாரணர் இயக்கம்,சென் ஜோன்ஸ் அம்பிலன்ஸ் பிரிவு,கடாற் படை,சுகாதார கழகத்தினர் இணைந்து இந்த மட்டக்களப்பு நகரினை தூய்மைப்படுத்தும் பணியை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாரணர் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பிரிவு ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் பொறியியலாளர் வை.கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் 204வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கு இணைவாக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்ததாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு நகரில் உள்ள வாவிக்கரை மற்றும் காந்திபூங்கா,சிறுவர் பூங்கா தனியார்,இலங்கைபோக்குவரத்து சபை பேரூந்து நிலைய பகுதிகள் மாணவர்களினால் தூய்மைப்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பு நருக்கு வருவோர் பொலித்தின்களையும் பிளாஸ்டிக்போத்தல்களையும் வீதியில் எறிந்துவிட்டுச்செல்லும் நிலையில் அவற்றினை அகற்றும் நடவடிக்கைகளையும் மாணவர்கள் மேற்கொண்டனர்.

பெற்றோர் மத்தியிலும் மட்டக்களப்பு நகருக்கு வருவோர் மத்தியிலும் விழிப்புணர்வொன்றினை ஏற்படுத்தும்நோக்குடன் இந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொண்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.