களுவன்கேணி வீதி தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய முன்னாள் கிழக்கு விவசாய அமைச்சர்…


களுவன்கேணி பிரதான வீதி தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் றோஹித போகொல்லாகம அவர்களிடம் இன்றைய தினம் கலந்துரையாடினார்.

இன்று (22) திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இவ்வீதியினைத் திருத்தித் தருவதாகச் சொல்லி சில வேலைகளைச் செய்தார்கள் அதன் காரணமாக இருந்த வீதியும் கூட தற்போது இல்லாத நிலையில் மக்கள் சிரமப்படுகின்றார்கள்.

இந்த வீதியை அமைப்பது தொடர்பில் பல்வேறு வேண்டுகோள்களை நாங்கள் விடுத்திருந்தோம். இன்றும் ஆளுநரைச் சந்தித்த போது இது தொடர்பில் கலந்துரையாடினேன்.

அதனை அவர் உடனடியாகச் செய்து தருவதாகத் தீர்மானித்து தன்னுடைய அதிகாரிகளுக்கு இது சம்மந்தமாக ஆணையிட்டிருக்கின்றார்.

எனவே மிக விரைவிலே அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். இதன் காரணமாக நீண்ட காலமாக களுவன்கேணி மக்கள் விடுத்த கோரிக்கை நிறைவு செய்யப்படும் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.