பல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது…





பல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பை மேற்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் - கி.துரைராசசிங்கம்,

தாமதப்படுத்தப்பட்டிருந்த கிராம அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் மற்றும் செங்கலடி சந்தைக் கட்டிடத் தொகுதி புனரமைப்பு, நாசிவன்தீவு வீதி, களுவன்கேணி வீதி என்பன புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநருடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபையால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆளுநர் அவர்களுடன் சந்தித்துத் கலந்துரையாடப்பட்டது பல்வேறு வேண்டுகோள்களும் என்னால் விடுக்கப்பட்டிருந்தன. அதன் நியாயங்கள் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளன.

அதன்படி கிழக்கு மாகாண சபையால் வருடாவருடம் செய்யப்பட்டு வருகின்ற தனித்தவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் மாகாண சபை இல்லாமையால் தற்போது ஆளுநரினாலேயே கையாளப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுண்டு.

இதனடிப்படையில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மகிழுர்முனை 110யு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் களுவன்கேணி 01, கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் கல்லரிப்பு, கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் முறாவோடை தமிழ், கோரளைப்பற்று மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அல் மச்மா நகர், மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஒல்லிக்குளம், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் பன்சேனை, மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் தாந்தாமலை ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இத்திட்டம் தொடர்பான ஆரம்ப செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்படாமையால் ஆரம்ப செயற்பாடுகளைப் பூர்த்தி செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மேற்குறித்த திட்டமும் தாமதப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை ஆளுநர் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டதற்கிணங்க தாமதப்படுத்தப்பட்ட இத்திட்டத்தினைச் உடன் செயற்படுத்தும் படி ஆளுநர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணை வழங்கியுள்ளார்.

அத்துடன் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கலடி சந்தைச் சதுக்கம் சரியான அடிப்படைத் திட்ட வரைபு இல்லாமையால் ஒரு குறுகிய இடப்பரப்பில் முடக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

எனவே இதற்கான முறையான திட்ட வரைபை வரைந்து பேருந்து நிலையத்தோடு கூடிய சந்தையொன்றை அமைப்பது இன்றியமையாதது என்கின்ற விடயமும் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

பதுளை மற்றும் திருமலை வீதி சந்தியாக இருப்பது இந்த சந்தைக்கு பெரும் வரப்பிரசாதம் என்ற வகையில் இதனுடைய அபிவிருத்தி ஆளுநர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையுடன் கலந்துரையாடி இது பற்றிய செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும் விவசாய கால்நடை அமைச்சராக இருந்தபோது அம்பாறை மாவட்ட காஞ்சிரங்குடாவில் கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையமும், விற்பனை நிலையமும் ஒன்றிணைந்த கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

 தற்போது இக்கட்டிடம் முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளமையால் இதனை விரைவாக திறந்து வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டதற்கு ஆளுநர் அவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு நாசிவன் தீவு ஓட்டமாவடி வீதி மற்றும் களுவன்கேணி வந்தாறுமூலை வீதி என்பவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கான வேண்டுகோளையும் ஆளுநர் அவர்களுக்கு விடுத்தமைக்கிணங்க ஆளுநர் அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்கு ஆணை பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்தார்.