நிழலுக்காக நாட்டப்பட்ட மரங்கள் வெட்டி நாசமாக்கப்பட்டுள்ளன


(லியோன்)

மட்டக்களப்பு மத்தியாஸ் வீதியின்  ஓரத்தில் நாட்டப்பட்டிருந்த மரங்கள் வெட்டி நாசமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்


ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டங்களில் ஒரு தேசிய வேலைத்திட்டமாக நாடளாவிய ரீதியில் மரங்கள் கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன .

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு மத்தியாஸ் வீதி பகுதியில் வசிக்கும் மக்களால் அவ்வீதி ஊடாக பயணிக்கும் பொதுமக்களின் நலன் கருதி நிழலுக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வீதி ஓரத்தில்   மரங்கள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த மரங்கள் முழுமையாக வெட்டி நாசமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .மக்கள் இல்லாத நேரத்தில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அவர்கள்  தெரிவிக்கின்றனர் .

நாடளாவிய ரீதியில் தேசிய வேலைத்திட்டமாக மரங்கள் கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இவ்வாறு  
நாட்டப்பட்ட மரங்கள் வெட்டப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவே மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் கவணத்திற்கு கொண்டு சென்ற போது  அவர் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் வீதி ஓரங்களில் உள்ள  மரங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார் .

ஆனால் குறித்த வீதி பகுதியில் உள்ள மரங்களை முழுமையாக வெட்டிவதற்கு தான் அனுமதி வழங்க வில்லை என அவர் தெரிவித்தார் .
குறித்த வீதி பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரங்களை வெட்டிய நபர் யார்  என அறியப்பட்டு அவருக்கு எதிரான  நடவடிக்கையினை  எடுப்பதாகவும் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்