திராய்மடுவில் காணிகளற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கையெடுக்கவும்

மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் அரச காணியில் உள்ள வறியவர்களுக்கு அந்த காணிகளை அவர்களுக்கு உரிமைகளை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

திராய்மடு பகுதியில் கடந்த கால சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.இவர்களில் பலரின் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அதிகமான நிலையில் உள்ளனர்.

இங்குள்ள மக்கள் சுனாமியினால் பாதிக்கப்பட்டு இப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட நிலையில் ஒரு பிள்ளைக்கு மட்டுமே குறித்த வீடுகளை வழங்கவேண்டிய நிலையில் தமக்கான காணிகளை பெற்றுக்கொள்வதிலும் வீடுகளை அமைத்துக்கொள்வதிலும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

தினக்கூலியிலேயே தமது சீவியத்தினை நடாத்திவரும் இப்பகுதி மக்கள் தமக்கான காணியொன்றினை கொள்வனவுசெய்து வீடு ஒன்றை கட்டுவதற்கு ஏதுவான வருமானம் இல்லாத சூழ்நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில் தமது காணிகளுக்குள் இருக்கும் அரச காணிகளில் சிறிய பகுதிகளில் தமக்கான வீடுகளை அமைத்து வாழ முற்படும் நிலையில் அவர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கடினமான போக்கினை கடைப்பிடிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நேற்று மாலை சுவிஸ்கிராமத்தில் அரச காணியில் உள்ளதாக கூறி நீதிமன்ற உத்தரவுடன் மீனவர் ஒருவரின் வளவுப்பகுதியில் டோசர்கள் கொண்டு வேலிகளும் தென்னை மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் கிராமம் பகுதியில் சுனாமியின் போது மூன்று பெண்பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்துவந்தவருக்கு வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.கலாமோகன் என்னும் மீனவரான இவர் தனது மூத்த மகளுக்கு திருமணம் முடித்துக்கொடுத்த பின்னர் அருகில் இருந்த அரச காணியில் கடந்த 15 வருடங்களாக வீடுகட்டி வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை குறித்த பகுதிக்கு வந்த நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் முன்னிலையில் குறித்த வீட்டின் வளவுப்பகுதிக்குள் இருந்த வேலிகளும் தென்னை மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

தமக்கான வளவு ஒன்றிணை வழங்கி உதவுமாறு பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்தபோதிலும் அது கருத்தில் கொள்ளப்படாமல் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பணம் படைத்தவர்களினாலும் அரசியல்வாதிகளினாலும் பெருமளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வறியவர்களின் நிலமையினை கவனத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் நீதிமன்றம் ஊடாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதேச வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டுகேட்டபோது,நீதிமன்ற உத்தரவுக்கமைய பல தடவைகள் காணியில் இருந்து வெளியேறுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவுக்கமையவே குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.