News Update :
Home » » நீர்ப்போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள் -ஒரு நாளைக்கு 10000 லீற்றர் உறிஞ்சும் தொழிற்சாலை

நீர்ப்போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள் -ஒரு நாளைக்கு 10000 லீற்றர் உறிஞ்சும் தொழிற்சாலை

Penulis : kirishnakumar on Tuesday, June 12, 2018 | 10:18 AM

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் தலைமையில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணகரம்,இரா.துரைரெட்னம் உட்பட மாநாகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை உடன்தடுத்து நிறுத்த,உன்சொந்த உழைப்பிற்கு எமது நிலத்தினை சோமாலியாவா மாற்றாதே,மினரல்வோட்டர் கம்பனியால் மிஞ்சப்போவது பாலைவனமே,இயற்கைக்கு உலை வைக்கும் தொழிற்சாலையினை மூடு,எமது வளத்தினை சுரண்டி எவரே வயிறு வளர்ப்பதா போன்ற சுலோகங்களை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டவர்கள் சென்றனர்.

இதன்போது குறித்த தொழிற்சாலைக்கு எதிராக பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் குறித்த தொழ்சாலைக்கு அனுமதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

புல்லுமலை பகுதியானது இயற்கை வளங்கள் கொண்ட பிரதேசமாக இருக்கும்போது ஒரு நாளைக்கு 10ஆயிரம் லீற்றர் தண்ணியை உறிஞ்சி தண்ணீர் போத்தல் தயாரிப்பதற்கான அனுமதி சுற்றலாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது.ஒரு வாரத்திற்கு எழுபதாயிரம் லீற்றர் தண்ணீர் உறிஞ்சப்படும்போது அப்பகுதியில் பாரிய நீர் தட்டுப்பாடுகள் ஏற்படும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஏற்கனவே செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் தினமும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.குறிப்பாக வறட்சியான காலங்களில் பிளாஸ்டிக் வரல்கள் வைக்கப்பட்டே நீர் வழங்கப்படுகின்றது.இவ்வாறான நிலையில் இவ்வாறான தண்ணீர்ப்போத்தல் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் இப்பகுதியில் பெரும் நீர்த்தட்டுப்பாடை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் என இங்கு சுட்டிக்காட்டமப்பட்டது.

குறிப்பாக இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் குறித்த பகுதியில் எந்தவித கள ஆய்வினையும் மேற்கொள்ளாமல்,பொதுமக்களின் எந்தவித கருத்துகளும் உள்வாங்கப்படாமல் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகம் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

ஒரு தொழிற்சாலை அமைக்கப்படவேண்டுமானால் பிரதேச அபிவிருத்திக்குழு மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதி வழங்கப்பட்டன் பின்னரே ஆரம்பிக்கப்படவேண்டும்.ஆனால் குறித்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியாமலேயே செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
குறித்த தொழிற்சாலைக்கு பிரதேச,மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெறப்படவில்லையென தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த தொழிற்சாலைக்கு அனுமதி வளங்கிய அரச நிறுவனங்களிடம் விளக்கம்கோரி இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிமொழியளித்தார்.

இதன்போது குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை அங்கிருந்து அகற்றுமாறு கோரும் மகஜர்களும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்துகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger