மட்டக்களப்பு மாந்தீவை அவசியமிக்க மனிதநேயத் தேவைக்காக பயன்படுத்த முடியுமா?

(சசி துறையூர்)

எமது சமூகத்தில் பெரும் கேள்விக் குறியாக உள்ள அவலம் மனநிலை பாதிக்கப்பட்ட,   உடன் பிறப்புக்களால் கைவிடப்பட்டவர்களின் உயிர்வாழ்தல் மற்றும் பாதுகாப்புக்கான வசதி வாய்ப்புக்கள்  எங்கேனும்  உள்ளனவா? 

இத்தையவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது என்பது பெரும் துன்பியலாகவே தொடர்கிறது. 

இத்தகையவர்களை பராமரிக்க மருத்துவ சிகிச்சை வழங்க கிழக்கு மாகாணத்தில் எங்கேனும் ஒர் இடமுண்டா?

இப்பரந்த உலகிற்கு அளவற்ற பொக்கிசங்களை கச்சிதமாக படைத்தும்  அருளியுமுள்ள இறைவன்   அவற்றில் மிக மிக உயர்வான படைப்பாக மானிட வர்க்கத்தை படைத்திட்டான். 

 இவ்வாறு மானிடராகப் பிறப்பதும் ஒரு பெரும் பாக்கியம் என்றே கூறலாம்.

இப்படிப்பட்ட மனித வர்க்கத்தில் ஒரு மனிதன்  முழுமையாகப் பிறந்தால் அதுவும் ஒருவகை அதிர்ஷ்டம் என்றே கூறலாம். 

ஆனால் அவன் அங்கவீனமாக, மனவளர்ச்சி குன்றியவனாக பிறந்தால் அதனை துரதிர்ஷ்டம் என்று சொல்வதா? அப்படி என்றால் அது யாரின் துரதிஸ்டம்? படைத்தவனாதா? பெற்றவர்களினதா? 

  இல்லை  அதுவும் ஒரு வகையில் பாக்கியமே. ஏனெனில் அவன் குறைபாடுகளினை உடையவனாயின் என்றாலும் கடவுளின் கருணைப் பார்வையில் மிக உயர் அந்தஸ்தைப் பெற்றவனாகவே காணப்படுகின்றான்.

சில பெற்றோர் இவர்கள் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 

என்றாலும் சில பெற்றோர் இவ்வாறான பிள்ளைகளை அல்லது உறவினர்களை ஒரு சுமையாக நினைக்கின்றனர். 

சிலர் இவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுவதென பராமரிப்பதென அறியாது தவிக்கின்றனர்.

 இன்னும் சிலர் இவர்களை ஏனையவர்கள் காண்பதால் தமது குடும்பத்திற்கு வெட்கமான, கெளரவத்துக்கு இழுக்கான ஒரு நிலை என மறைத்து வைத்தும், அடைத்து வைத்துக்கொண்டும் பராமரித்து வருகின்றனர். 

சிலர் முற்றாக கைவிட்டும் வீட்டை விட்டு வெளியேற்றியும் வீதிகளில் அலையவிட்டுமுள்ளனர். 

இன்னும் சிலர் அவர்களுக்கு மாதாந்தம் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகையை சுருட்டிக் கொள்வதுடன் பிச்சையொடுத்து வரச் செய்து அதில் வயிறு வளர்க்கவும் செய்கின்றனர்.

இவ்வாறான உதவி செய்யும் இவர்களை ஒருவேளை குளிப்பாட்டி, உணவளித்து சுகாதார பராமரிப்பு செய்யவும் மனமில்லாது இருக்கின்றனர்.

இவர்களுக்கு போதிய பாதுகாப்பு, உணவு, வைத்திய, சுகாதார வசதிகள் இன்மையே சிறிய நேய்நிலைமைகளும் முற்றி தீவிரம் பெறுகின்றன.

 இவர்கள் மீதான சமூகத்தின் ஏளனப்பார்வை மாத்திரமில்லாது துன்புறுத்தல்களும் இளைஞர்கள், சிறுவர்கள் ஏன் வளர்ந்தோரால் கூட மேற்கொள்ளப்படுகின்றன.

 அண்மைக்காலமாக இத்தகைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும் பாலியல் ரீதியான வன்முறைகளும் அதிகரித்து  வருகின்றமையினை அறியமுடிகின்றது.

  இவர்களை இறைவன் ஏன்  படைத்தனோ தெரியவில்லை. நிச்சயமாக அதனை ஆராய்ந்து இனி பலனேதுமில்லை. 

 இத்தகையவர்கள் வாழ்தலுக்கான உரிமையை சூழ்நிலையை   நாம் படித்தவர்கள், நாகரீகமானவர்கள், மனிதநேயமிக்கவர்கள்  அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. 

இல்லாது போனால் நாம் பூரணமாக பிறந்தோம் வாழ்ந்தோம் என்பதில் அர்த்தமில்லாது போய்விடும். 
வாழ்வதற்குரிய வழியையும் அமைத்தே . 

எனவே இவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும் அல்லவா?

கிழக்கு மாகாணத்தில் எங்குமே மனநிலை பாதிக்கப்பட்ட குடும்பங்களினால் கைவிடப்பட்டவர்களை பாதுகாத்து பராமரிக்க இல்லமோ ஆச்சிரமங்களோ இல்லை. 

இத்தகயைவர்கள் இன்று நம்மிடையே அதிகரித்து வீதிகளில் அலைந்து திரிகின்றமையோடு , வாகனப் போக்கு வரத்து, வாகனம் , மற்றும் பாதசாரிகள், பொது சொத்துக்களுக்கு இடைஞ்சல், சேதம் ஏற்படுத்துகின்ற நிலமை அதிகரித்து செல்கின்றமையினையும் காணலாம். 

இவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வைத்து பராமரிமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர் .

இவர்கள் வாழ்வதற்கு பொருத்தமானவர்கள் அன்று, பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். 

சிலர் பிறப்பாலும், போர் மற்றும் அதன் இழப்புக்கள் பாதிப்புக்கள், காதல் தேல்வி, பரிட்சை முடிவுகளின் இழப்புக்கள் ,விரக்தி போன்ற பல காரணிகளால் இத்தகைய நிலையை அடைந்துள்ளனர். 

இவர்களுக்கு முறையான பாராமரிப்பு , சிகிச்சை வழங்குவதன் மூலம் குணப்படுத்துவதற்க்கான வாய்ப்புக்களுமுண்டு. 

அவ்வாறு குணமாக்கப்பட்டவர்களுமுண்டு.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இடம் பெற்ற  சம்பவம் ஒன்று. 

எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகிய   கிராமம் ஒன்றில்,  பிறக்கும் போது அல்லாது பாடசாலை கல்வி கற்கும் பருவத்தில் இளைஞர் ஒருவர்  காதல் மற்றும் பரிட்சை தேல்வியினால் மனமுடைந்து இரவு பகலாகா தூக்கமில்லாது வீதியில் சுற்றித்திரிந்துள்ளார்  மனநோயாளியாக.

பலவருடங்களுக்கு பிறகு திடிரென அவர் சுகமடைந்தார். அவருக்கு பழைய நினைவுகள் எதுவுமிருக்கவில்லை போலும், .

ஆனால் துரதிஸ்டவசமாக யாரே அவர்க்கு கடந்தகால வாழ்க்கையை நினைவுபடுத்திவிட்டனர்.  

அதனால்  அவமானம் தாங்க முடியாது நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

எனவே தான் இத்தகையவர்களை முறையாக பாதுகாத்து சமூகத்தோடு கவனமாக இணைக்க வேண்டியுள்ளது.

ஆனால் அதற்கு எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்லாது கிழக்கு மாகாணத்திலோ எதுவித வசதி வாய்ப்புக்களுமில்லை. 

என மனம்திறக்கிறார் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட சமூகசேவை உத்தியோகஷ்தர் திரு சாரங்கநாதன் அருள்மொழி.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்புக்களை பெற நாடி இருக்கிறேன். 

குறிப்பாக சில வசதிபடைத்த உள்ளுர் வெளியூர் தனவந்தர்களின் கவனத்திற்கும் இந்த விடயத்தினை கொண்டு சென்றிருக்கிறேன், 

இன்னும் அதற்கான பூரணமான குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு எதுவும் கிடைக்கவில்லை.

சமய நிறுவனங்களாவது இந்த விடயத்தில் கவனமெடுத்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தினை குறிப்பிட வேண்டும் ( 18) பதினெட்டு வயதுவரை உள்ளோர்க்கும், (60) அறுபது வயதுக்கு மேற்பட்டோர்க்கும் பராமரிப்பதற்கு பதுகாப்பிடங்கள் எமது மாவட்டத்தில் மற்றும் மாகாணத்தில் புகழிடம்,  ஓசணம், முதியோர் இல்லம்  போன்ற இடங்கள் உள்ளன. 

ஆனால் பதினெட்டு தொடக்கம் அறுபது வயதுவரை உள்ளோரை பராமரிக்க ஒரு சிறிய இடம் கூட இல்லை. 

இந்த வயதிற்குட்பட்டோரே அதிகம் உள்ளனர் நமது பகுதியில், இவர்களை பராமரிப்பதுதான் இன்று எமக்குள்ள பாரிய சவாலாக உள்ளது. 

நாட்டின் ஏனைய சில இடங்களில் இவர்களை பராமரிப்பதற்க்கான இடங்கள் உள்ள போதிலும் , அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்பதில்  சிரமங்கள் அதிகமுள்ளன, 

மொழிப்பிரச்சினை, இடநெருக்கடி என
சில தடைகளும் உள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அவர்களுக்கான உதவுத் தொகைகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார், பராமரிப்புக்கான இடத்தேவையினை பூர்த்தி செய்யும் பட்சத்தில் என்கிறார் மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர். 

யார் இந்த மனித நேயப்பணிக்கு உதவ முந்துவது? 

மட்டக்களப்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களே!!! 
 அரச சார்பற்ற நிறுவனங்களே இது உங்களின் கவனத்திற்கு.

அண்மையில் மண்முனை மேற்கு பிரதே இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழக சம்மேளனத்தின் தலைவர் உட்பட இளைஞர் குழுவொன்று மாந்தீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 

அந்த விஜயத்தின் மூலம் இந்த மாவட்டத்தின் இளையவர்கள் சில விடயங்களை நேரடியாக உணர்ந்து கொண்டார்கள். 





மாந்தீவு பாதுகாக்கப்பட வேண்டிய ஒர் தேவைப்பாடான இடம்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறியளவான மற்றும் பெரியளவிலான  தீவுகள் பல காணப்படுகின்றன.

 தீவு என்பது நாலா பக்கமும் நீரால்  சூழப்பட்டு நிலத் தொடர்பற்று காணப்படும் ஒரு நிலப்பகுதி தீவு எனப்படுகிறது.

 இத் தீவுப்பகுதிகளுல் மாந்தீவு என்பது விசேடமாக குறிப்பிடத்தக்க ஓர் தீவாகும்.
 இங்குதான் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வரும் இந்த தீவானது அழகிய இயற்கை எழில்கொஞ்சும் பசும்சோலையாக காணப்படுகிறது.

இந்த தீவின் பெயரை பலர் கேள்வியுற்றிருந்தாலும் ஒரு சிலரே முழுமையாக இந்த தீவை  அறிந்திருப்பர். 

அவற்றில் ஒரு சிலரே இந்த தீவுக்கு நேரடியாக பயணம் செய்திருக்கவும் முடியும். 

ஏனென்றால் அருகில் உள்ள வவுணதீவு மற்றும் வலையிறவு , புதூர், திருப்பெருந்துறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களாகட்டும், முதியோராகட்டும் பெரும்பாலானோர் இங்கு செல்வில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே குறைபட்டுக்கொள்கின்றனர்.

காரணம் கடந்த கால அசாதாரண சூழ்நிலை மற்றும் மாந்தீவின் பயங்கரமான தோற்றமும், தீவைச்சுற்றியுள்ள ஆழமான நீர்ப்பகுதியுமாகும். 

மேலும் இங்கு விச யந்துக்கள் அதிகமாகவும் குறிப்பாக நாகம், வெங்கலாத்தி போன்ற பாம்பினங்கள்  காணப்படுவதாக குறிப்பிடும் வவுணதீவைச் சேர்ந்த மீனவர் ஒருவர், மலைப்பாம்பும் இங்கு காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

அவற்றில் இரண்டுபாம்புகள் 2010ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கரை ஒதுங்கியதனை தாம் கண்டதாகவும் அவற்றினை வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவினர் மீட்டுகொண்டு சென்றதாக குறிப்பிடுகிறார்.

நீண்ட பசும் புற்கள் அடர்த்தியாகவும் மா, புளி,விளா,பனை,தென்னை போன்ற ஓங்கி நீண்டு வளர்ந்த மரங்கள், பூத்துக்குலுங்கும் சிறிய வகையான கொடி சொடிகளையும் காணலாம்.

அதிலும் குறிப்பாக பறவைகளின் வாழிடமாகவும் இந்த தீவை காணலாம் கூட்டம் கூட்டமாக புறா,கொக்கு,காகம், கடற்காகம் என பல இன்னோரன்ன உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

குறிப்பாக வசந்த காலத்தில் இந்த தீவில் அதிகளவான பறவைகளின் நடமாட்டத்தை காணலாம் என மற்றுமொரு பிரதேச வாசி அழகாக விபரிக்கிறார்.

இயற்கையின் கொடை அற்புதமானது அருமையான பொக்கிஷம். இவற்றின் பெறுமதி தெரியாது இந்த பயலுகள் அழிக்கானுகள் தம்பி, 

நேற்று மதியத்தால கிறுகி மாந்தீவுக்குள்ள  நாலுபேருபோய் கொக்கு அடிச்சுட்டு கொண்டு வந்திருக்கானுகள் அத நம்ம வவுணதீவு ஓஜசி கண்டு உடனே புடிச்சு உள்ள போட்டு நாலு பேரும் அம்பதாயிரம் கட்டித்து வந்தாண்டா மனே, என சலுத்துக்கொள்கிறார் வவுணதீவு ஊர் வாசி  ஒருவர். 

தம்பி அண்டைக்கு சண்டை நடக்கக்க பயங்கரமான தீவு, ஆமி இருந்த, ஆமி இருக்க முதலும் அதுக்கு பிறகும் வவுணதீவு சனத்துக்கு குடி தன்னி இங்கதான் .இப்பதானே வவுணதீவுக்கு உன்னிச்சை தன்னி வந்த. 

மட்டக்களப்பு இருந்து மாந்தீவுக்கு குழாய்ல தண்ணி வந்த நாங்க தோணில வந்து ரெண்டுமூனு வூளில தன்னி புடிச்சு தோங்காயும் கொள்ளியும் பொறக்கி கொண்டு போவம்.

கிட்டத்துலதான் ஆமி எல்லாத்தயும் பிரிச்சுக்கொண்டூ இங்கருந்து வெளியேறுன அம்மா ஒருவரின் கதை இது. எட மனே எனக்கு நேரம்போகுது இருட்டுறதுக்குள்ள நான் வலைபாக்கனும் வரட்டா நான்பொயிற்று. மெல்ல நகர்கிறது நீல வர்ண தோணி ஒன்னு.

தம்பி எனக்குத் தெரியாது நானும் அறியாத காலம் என்ட அம்மாவுக்கும் தெரியாதாம், அம்மாட அம்மாவுக்கும் தெரியாதாம் அவவும் சொல்றா தன்னறியா காலத்திலிருந்து மாந்தீவுல தொழுநோய் ஆஸ்பத்திரி இருந்ததாம்.

 அப்போ நூத்துக்கணக்குல நோயாளிகள் இருந்தவங்க நாங்க போய்ப்பாக்கல அது தொத்துநோயாம் ஆம்புளைகள் மட்டும் தான் போய் பார்த்துட்டு வந்து சொல்லுவாங்க. 

இப்படி விவரிக்கிறார் வவுணதீவைச் சேர்ந்த ஓர் மீனவத் தாய் மாந்தீவு வைத்தியசாலை பற்றி.

மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் எட்டு கிலோ மீற்றர் மேற்க்காக வாவி நடுவே அமைந்துள்ள ஒரு தீவாகும், 

கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் தோணி மற்றும் வள்ளங்களில் பயணம் செய்ய வேண்டும்.

 தீவின் மறுபக்கம் அண்மித்த கிராமம் என்றால் அது வவுணதீவு.

 இந்த வைத்தியசாலையில் தற்போது மூன்று நோயாளிகள் மாத்திரமே தங்கியிருந்து பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு பல பெரிய சிறியளவிலான கட்டிடங்கள் பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.

அடர்ந்த புற்புதர்களுக்கு மத்தியில் இந்து பெளத்த கிறிஸ்தவ இஸ்லாமிய ஆலயங்கள் மிகவும் தூர்ந்து போன நிலையில் இடிபாடுகளுடன் சில கட்டிடங்களும் புதர் மண்டி மூடியே காணப்படும் கட்டிடடங்கள் திகில் ஊட்டுவனவாகவும் உள்ளமை இத் தீவிற்கு செல்லும்
மனிதநேயமுள்ளோரை ஒருகனம் ஸ்தம்பிக்க செய்யும்.

ஆச்சரியமிக்கதக்க வகையில் மாந்தீவின் மர்மமாக தொடரும்   மனிதநேயம் மிக்க செயற்பாடு என்னவெனில் மூன்று வயது முதிர்ந்த தொழுநேயாளர்கள் அவர்களை பராமரிக்கவென பதினொரு ஊழியர்கள்.
மாந்தீவில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை மிக நீண்டகால வரலாற்றை கொண்டதாக கூறப்படுகிறது.

 இங்கு ஆரம்பகாலத்தில் நூற்றுக்கணக்கான தெழுநோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர் இவர்களில் பலர் இறந்து போயினர், சிலர் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள தொழுநோய் வைத்தியசாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

 தற்போது மூன்று நோயாளிகள் மாத்திரம்தான் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு நோயாளிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து விடும் உறவினர்கள் அதன் பின் வருவதே இல்லை என்கின்றனர் வைத்தியசாலை ஊழியர்கள்.

நோயாளிகளுல் ஒருவர் 60வயதிற்கு மேலிருக்கும் முப்துவருடமாகவும், இருவர் சுமார் 65 வயதிற் மேற்பட்டவர்கள் 15 மற்றும் இருபது வருடங்களாக இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 

இவர்களின் முகத்தில் தெரியும் ஏக்கம் காணும் பொழுது யாரையும் கண்ணீர்சிந்த வைக்கும்.

சுவரும் இவர்களுடன் கதைபேசும், தொலைக்காட்சிப் பெட்டி  உற்ற நண்பன், நன்றியுள்ள நாலு கால் ஜீவன்கள் சதாகாலமும் நல்ல நண்பனாய் ஒரு மொழியில் உரையாடும். 

நாங்கள் செல்கையில் ஆக்ரோசமாக குரைத்துக்கொண்டு பத்துக்கு      மேற்பட்ட நாய்கள் பாய்ந்துவந்தன, 

அண்மையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன நிருவாகிகள்,  மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவர், நிருவாகிகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழுவினர் அங்கு சென்று முருகன் ஆலய வளாகத்தை சிரமதானம் செய்து பொங்கலிட்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு நோயாளிகளுடன் சினேக பூர்வமாக கவந்துரையாடி மகிழ்வூட்டினர்.

இளைஞர் குழுவை கண்ட அந்த மூன்று நோயாளிகளும் மலந்த முகத்துடன் புன்னகை பூத்தனர், ஓடி வந்து ஏதோ ஏதோ பேசினர் புரியவில்லை, புரிந்தது அவர்களின் ஏக்கமும் உறவுகளை காணத்துடிக்கும் தவிப்பும் மாத்திரமே.