கூழாவடியில் வாய்பேசமுடியாத இளைஞன் ரயில் மோதி பலி –புகையிரத நிலைய ஊழியர்களின் அசமந்தம் என குற்றச்சாட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன்(27வயது)என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞருக்கு வாய்பேசமுடியாத காது கேளாத நிலையில் தண்டவளம் ஊடாக சென்றவரே ரயில் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு உயிருக்கு போராடிய நிலையில் புகையிரத நிலைய ஊழியர்களினால் மீட்கப்பட்ட நிலையிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை புகையிரத நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.