சிகரங்களின் சமர்:வெற்றிவாகை சூடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி

“சிகரங்களின்  சமர் ”என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்து   கல்லூரிக்கும் , மட்டக்களப்பு  பெரியகல்லாறு  மத்திய கல்லூரிக்கும் இடையிலான  8 வது  கிரிக்கெட்  சமரில்  மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரி  72 ஓட்டங்களால்  வெற்றி பெற்று 2018 ஆண்டுக்கான சிகரங்களின்  சமரில் சம்பியனானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு  இந்து  கல்லூரிக்கும் , மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும்  இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற  8 வது மாபெரும் சிகரங்களின் கிரிகெட்   சமர்  மட்டக்களப்பு கல்லடி   சிவானந்தா  தேசிய  பாடசாலை  மைதானத்தில்  நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வானது மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.டி.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சுகிர்தகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான மதன்,பூபால்,ரூபராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் ஆரம்பத்தில் வீரர்கள் வரவேற்கப்பட்டு உடற்பயிற்சி கண்காட்சி நடைபெற்றதுடன் வீரர்கள் அறிமுகவுடன் கிரிக்கட்போட்டி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற  நாணய சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடிய  மட்டக்களப்பு  பெரியகல்லாறு மத்திய கல்லூரி 50ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த நிலையில்  175  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு  இந்து  கல்லூரி 36ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களை இழந்த நிலையில் 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. 

இதன்மூலம் 72 ஓட்டங்களால் மட்டக்களப்பு  பெரியகல்லாறு  மத்திய கல்லூரி  வெற்றி பெற்று 2018  ஆண்டுக்கான  சிகரங்களின் சமர்  வெற்றிக் கிண்ணத்தை தனதாகிக்கொண்டது.

எட்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்த சிகரங்களின் சமர் கிரிக்கட்போட்டியில் நான்கு போட்டிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் நான்கு போட்டிகளில் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீநேசன் .எஸ் .வியாழேந்திரன் , மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் .கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே .அருள்பிரகாசம் மற்றும் இரண்டு கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கல்லூரிகளின் பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர.

இந்த கிரிக்கட் சமரின் சிறப்பாட்டக்காரராக பெரியகல்லாறு மத்திய கல்லூரியினை சோந்த ஆர்.தனுஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த துடுப்பாட்டக்காரராக பெரியகல்லாறு மத்திய கல்லூரியினை சேர்ந்த ரி.லுக்ஷாந்த் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியை சேர்ந்த எம்.சாரூகன் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த களத்தடுப்பாளராக பெரியகல்லாறு மத்திய கல்லூரியினை சேர்ந்த பி.அபிலக்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.