மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்ககோரியும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழி இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாகவும் அவற்றினை நிறைவேற்றி அனைத்து பட்டதாரிகளையும் நியமனத்தில் உள்ளீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது முன்னெடுக்கப்படும் நேர்முகத்தேர்வின்போது வேறுவேறு விதமாக புள்ளிகள் இடப்பட்டதாகவும் இந்த நேர்முகத்தேர்வினை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இங்கு வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் நேர்முகத்தேர்வு மூலம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்காமல் பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு பட்டதாரிகள் வேண்டுகோள்விடுத்தனர்.

ஏமாற்றம் நிறைந்ததா பட்டதாரிகளின் வாழ்க்கை,புறக்கணிக்காதே புறக்கணிக்காதே பட்டதாரிகளை புறக்கணிக்காதே,ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே?,35வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை முன்னுரிமைப்படுத்து போன்ற வாசகங்களைக்கொண்ட பதாகைகளையும் ஆர்ப்;பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.