மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பனவற்றினை தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு என்பன இணைந்து இந்த நிகழ்வினை இன்று வெள்ளிக்கிழமை காலை நடாத்தியது.

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் கே.நாராயணம்பிள்ளை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.உவைஸ்,சிரேஸ்ட சட்டத்தரணிகளான பே.பிரேம்நாத், பி.சின்னையா, வி.வினோபாஇந்திரன்,ரி.தியாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதில் இருந்து மீட்பது,போதைப்பொருள் பாவனைக்கு விதிக்கப்படும் தண்டனைகள் அதனால் மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சமூகத்தில் போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இங்கு சட்டத்தரணிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதேபோன்று சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதனை தடுப்பதற்கான வழிவகைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பன தொடர்பில் சட்டத்தரணிகளினால் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது மாணவர்கள் மத்தியில் உள்ள சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு சிரேஸ்ட சட்டத்தரணிகள் பதில்களைவழங்கினர்.