மண்முனைப்பற்றினை கைப்பற்றியது சுயேட்சைக்குழு –போனஸ் ஆசனத்தில் வந்தவருக்கு அடித்தது அதிர்ஸ்டம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஆட்சி அதிகாரத்தினை சுயேட்சைக்குழு 01 கைப்பற்றியுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் வகையிலான முதலாவது பிரதேசசபை உறுப்பினர்களுக்கான அமர்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராச்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் ஆரம்பமான இந்த சபை அமர்வில் மண்முனை பற்று பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினர் உட்பட 17 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் தலைவர் தெரிவுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு கோரப்பட்டதற்கு இணங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செ.மாணிக்கராஜாவின் பெயரும் சுயேட்சைக்குழு 01இல் போன்ஸ் ஆசனம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சோ.மகேந்திரலிங்கம் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதன்போது இரகசிய வாக்கெடுப்பினை நடாத்துவதற்கு பெருமளவான உறுப்பினர்கள் தமது ஆதரவினை தெரிவித்தன் காரணமாக இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினரும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில் 15 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

இதன்போது 07 வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செ.மாணிக்கராஜாவும் சுயேட்சைக்குழு 01இல் போன்ஸ் ஆசனம் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சோ.மகேந்திரலிங்கம் 08 வாக்குகளையும் பெற்றதன் காரணமாக மண்முனைப்பற்றின் தவிசாளராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

இதேபோன்று பிரதி தவிசாளரை தெரிவுசெய்வதற்காக கோரப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மா.சுந்தரலிங்கத்தின் பெயரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் த.தயானந்தனின் பெயரும் முன்மொழியப்பட்டதுடன் பகிரங்க வாக்கெடுப்பும் கோரப்பட்டது.

இதனடிப்படையில் 09 வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் 07வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினரும் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மா.சுந்தரலிங்கம் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த வாக்கெடுப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன சுயேட்சைக்குழு வேட்பாளருக்கு தவிசாளர் தெரிவில் ஆதரவு வழங்கியுள்ளதுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக்கூட்டமைப்பு என்பன நடுநிலை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.