கல்முனை மாநகர சபை மேயர் தெரிவிற்கு முன்பாக நடந்தது என்ன?

கல்முனை மாநகர சபை மேயர் தெரின் போதும் அதற்கு முன்பாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சோரம் போனதாகவும் கட்சியின் செயலாளர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் மிகவும் மோசமான முறையில் பொய்யான போலியான அவதுறுகளை சமூகவலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

கல்முனை மாநகர சபை மேயர் தெரிவுக்கு முன்பாக நடந்தது இதுதான்.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  கலந்துரையாடலில் ஈடுபட்டது உண்மையான விடயம்.

02.04.2018 காலை 10.30 மணியளவில் கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வில் பங்குபற்ற இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பு நற்பட்டிமுனையிலுள்ள கல்முனை வடக்கு கூட்டுறவு கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.


இதற்கு முன்னராக கடந்த 2018.03.29ம் திகதியன்று மாலை இதே உறுப்பினர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

சபை அமர்வுக்கு முன்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்திருந்து இறுதி ஒழுங்குகள் பற்றி கலந்து பேசிய பின்னர் சபைக்குச் செல்வது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நடைமுறையாகவுள்ளது.

இவ்வகையிலேயே 2018.04.02ம் திகதி சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்கள் முதலாவது அமர்வில் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பது பற்றி கலந்துரையாடப்பட்ட போது, கல்முனையில் தெரிவு செய்யப்பட்ட எல்லாத் தமிழ் உறுப்பினர்களும் ஒன்றாகச் செயற்படுவதாகவும், தங்கள் மத்தியில் இருந்து மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை முன்மொழிந்து போட்டியிடவுள்ளதாகவும் ஏற்கனவே தமிழரசுக் கட்சித் தலைவருடனான சந்திப்பிலும் இதே கருத்தக்களையே தெரிவித்திருந்தனர்.

அன்றைய தினம் தலைவரினால் விளக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நேற்றைய சந்திப்பின் போதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.


சுகயீனம் காரணமாக முதலாவது கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாதிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் 02.04.2018 நடைபெற்ற   கூட்டத்தின் இடையே வந்து கலந்து கொண்டார். கலந்துரையாடலின் போது எவ்வித முரண்பாடுகளோ, வாக்குவாதங்களோ இடம்பெறவில்லை.

 பொதுச் செயலாளருடைய கருத்துக்கள் மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாகவும், அவை தொடர்பில் தங்களுக்கும் அக்கறையுள்ளதாகவும், இருப்பினும் தற்போதைய நிலையில் மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஏற்கனவே தீர்மானித்ததன் படி செயற்படுவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


அவ்வேளையில் இளைஞர்கள் சிலர் மண்டபத்திற்கு முன்னால் கூடினர். பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் அவர்களோடு சென்று உரையாடிவிட்டுத் திரும்பினார்.

 அவர் திரும்பிய கையோடு கலந்துரையாடலும் முடிவுற்றது.

கலந்துரையாடல் முடிவுற்றதும் பொதுச் செயலாளர் அங்கிருந்த இளைஞர்களுடனும் உரையாடினார்.

அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகவும், வேறொரு நாளில் சந்தித்து நாம் அனைவரும் தேவைப்படின் ஒரு நாள் முழுவதும் நமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலாம் என்றும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

 இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் பொதுச் செயலாளரை வழியனுப்பி வைத்தனர்.
இவை தான் அங்கு நடைபெற்றன.


எவ்வித கட்டாயப்படுத்தல்களோ அல்லது தவறாக சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் தன் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பது போன்ற கருத்துக்கள் எதுவும் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல அத்தகைய மனநிலை ஏற்படும் வகையிலான சூழல் கூட அங்கு உருவாகவில்லை.


இவை இவ்வாறு இருக்க வெறும் எதிர்மறைக் கற்பனைகளின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு தொடர்பில் வந்த செய்திகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை.

மக்களை தவறான செய்திகள் மூலம் குழப்பமடையச் செய்வதில் எவ்வித தர்மமும் இல்லை.


நியாயமாகச் சிந்திக்கக் கூடிய அனைவரும் இந்த உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


மிகச் சுமூகமாகவும், சந்தோசமான சூழ்நிலையிலும் முடிவுற்ற ஒரு நிகழ்வை இவ்வாறன முறையில் வெளிப்படுத்துவதிலே அடைகின்ற மகிழ்ச்சியானது எவ்விதத்திலும் மாண்புக்குரியது அல்ல.