தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தனது சுய கௌரவத்தினை இழந்துள்ளது – கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தங்களது சுயகௌரவத்தினை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு  சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி மண்டபத்தில் நடைபெற்ற இந்த சத்திப்பிரமாண நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ்,பொருளாளர் வசந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டு முதன்முறையாக தேர்தல் களத்தில் குதித்த கட்சியென்ற அடிப்படையில் மட்டக்களப்ப மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சிசபைகளில் ஏழு உறுப்பினர்களைப்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் தலைவர் முன்னிலையில் சத்திப்பிரமாணம் நடைபெற்றதுடன் அவர்களுக்கான உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பத்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எமது வேட்பாளர்களுக்கான சத்தியப்பிரமாணமும் அவர்களுக்கான நியமனங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டி எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்படுவது என்பது பற்றி திட்டமிட்டிருக்கின்றோம்.

தமிழ்த் தரப்புகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வெற்றி பெற்றிருக்கின்ற எங்களுடைய வேட்பாளர்களின் பிரதேசங்களில் எங்களுடைய கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. எங்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியை செய்யக்கூடிய, அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்கக்கூடியவர்களாக யார் முன்வருகின்றார்களோ அவர்களுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டிருக்கின்றோம்.

வரவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் கூட கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமும்; எதிர்பார்ப்புமாகும்.அதற்காக இந்த பிரதேச சபைகளில் இணைந்து செயற்பட நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம்.மிகவிரைவில் அதுபற்றிய முடிவுகளை நாங்கள் அறிவிப்போம்.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்திருக்கின்றது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கடந்த காலங்களில் முழுப் பிரதேச சபைகளிலும் ஆட்சியிலிருந்திருந்தாலும் இம்முறை ஒரு பிரதேச சபையைக்கூட அவர்களால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இவ்வாறானதொரு சங்கடமான நிலையில் தான் ஆட்சியமைப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இவ்விடயத்தில் நாங்கள் சரியான முடிவுகளை எடுத்து எமது மக்களுக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை ஆராய்ந்து செயற்பட தீர்மானித்திருக்கின்றோம்.

தெற்கில் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்த வெற்றியை எங்களுடைய கட்சிக்கான பாரிய வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம். இதனூடாக விரைவில் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியான விடயமாகும். எதிர்காலத்தில் எங்களுடைய கைகளில் நிர்வாகங்கள் வரும். அதன் மூலம் நாங்கள் எமது மக்களுக்கு பல சேவைகளை ஆற்றுவோம்.

பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கின்றது.எங்களைப் பொறுத்தவரை ரணில் அவர்கள் பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர். ஜனாதிபதி மைத்திரி அவர்களும் பிரதமர் ரணில் அவர்களும் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

இன்று அரசியல்கைதிகள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தின் பிடியிலிருக்கின்ற எமது மக்களின் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஏமாற்றத்தையே தமிழ் மக்களுக்கு தந்துள்ளார்கள்.

இவர்களை நம்பித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனியாகவே இருக்கின்றது.இதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொண்டு ஒன்றுபட்டுசெயற்படவேண்டும்.கிழக்கு மாகாணசபை தேர்தலில் எதிர்வரும் காலத்தில் ஒரு மாற்றத்தினை நாங்கள் ஏற்படுத்துவோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தங்களது சுயகௌரவத்தினை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ளனர்.ஆனால் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் கட்சிகள் வெற்றிபெற்றுள்ள நிலையிலும் அவர்களுடன் இணைந்த ஆட்சியமைப்பதற்கு தடையாகவுள்ளனர்.

வாகரை மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,எங்களது கட்சி வென்றுள்ளது.இந்த மூன்று கட்சிகளும் இணைந்தால் முஸ்லிம்களை தவிர்த்து அங்கு ஆட்சியமைக்கமுடியும்.ஆனால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வருவதில்லை.

டக்ளஸ் தேவானந்தவை ஒட்டுக்குழுவென்றும் காட்டிக்கொடுத்தவர் என்றும் துரோகியென்றும் கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அவர்களுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என்றால் ஏன் இங்குள்ளவர்களுடன் ஆட்சியமைக்கமுடியாது.இதனையவர்கள் பிரதேசவாதமற்ற நிலையில் பார்க்கவேண்டும்.யாழ்ப்பாணத்திற்கு ஓருமுறை மட்டக்களப்புக்கு ஒருமுறையென தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதவிடயம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புத்திசாதுரியமாக செயற்படுமாகவிருந்தால் வடகிழக்கில் அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் தமிழர்களைக்கொண்டே ஆட்சியமைக்கும் நிலையிருக்கின்றது.இதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எதிர்வரும் நான்காம் திகதி பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கவேண்டும.;.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்காக வாக்களிக்கவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதி எதனையும் அவர் நிறைவேற்றவில்லை.அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை மட்டும் ஏமாற்றவில்லை,தமிழ் மக்களையே ஏமாற்றியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களில் கரிசனை இருக்குமானால் சிறந்த முடிவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எடுக்கவேண்டும்.