காரைதீவு பிரதேச சபையில் கட்சித் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்பட்ட உறுப்பினர் தொடர்பில் நடவடிக்கை

கடந்த 2018.03.27ம் திகதி காரைதீவு பிரதேச சபையின் முதல்நாள் அமர்வு இடம்பெற்றது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர், பிரதித் தவிசாளர் தொடர்பில் அப்பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகச் செயற்பட்ட உறுப்பினர் சபாபதி நேசராசா அவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவ்விடயம் தொடர்பில் அவரிடம் விளக்கம் கோருவதற்கான கடிதம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களினால் இன்றைய தினம் (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தவிசாளர் தெரிவின் போது அவருடைய செயற்பாடு பற்றியும், பிரதித் தவிசாளர் தெரிவின் போது அவர் நடுநிலை வகித்தமை தொடர்பிலும் இக்கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்விளக்கமானது உறுப்பினருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று 07 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்பட்டு, கட்சியின் ஒழுக்கக் கோவையை மீறியமையால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.