மூன்றில் ஒரு பகுதியினரே சுத்தமான குடிநீரை பெறுகின்றனர் –மட்டு.அரச அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளதாக ஏனையவர்களும் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

சர்வதேச குடிநீர் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வதேச குடிநீர் தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு வியாழக்கிழமை காலை வெல்லாவெளியில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் பாம் பவுண்டேசன அமைப்பினரும் யுஸ் எயிட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடுசெய்த சர்வதேச குடிநீர் தின நிகழ்வு வெல்லாவெளி கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக யுஸ் எயிட் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் அலினா ரெஸி,பாம்பவுண்டேசன் பணிப்பாளர் சுனில் டொம்பொல,பிரதேச சுகாதார அதிகாரி குணசேகரம்,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தற்போதைய கால நிலை மாற்றத்தினால் நீரில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன் வரட்சியில் அதிகளவு பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமும் இருக்கும் நிலையில் வறட்சி காலத்தில் எதிர்நோக்கப்படும் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நீண்டகால திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள்,அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குடிநீர் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாம் பவுண்டேசன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் விநியோக திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது போரீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட விவேகாந்தபுரம்,திருக்கொண்ரை முன்மாரி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டமும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

நிலைபேறான அபிவிருத்தி என சர்வதேச ரீதியில் பிரகடனப்படுத்துவதில் மிகவும் பிரதானமானதாக தூயநீரை மக்களுக்கு வழங்குதல் காணப்படுகின்றது.

மாவட்ட சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தூய நீரை பெறுவதாக அறிய முடிகின்றது. ஏனையவர்களுக்கான தூய நீரினை வழங்குவதற்காக அரசாங்கமும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் நாங்கள் தூய நீர் கிடைக்காத மூன்றில் இரண்டு பகுதி மக்களை கருத்தில் கொண்டு ஏற்பாடுகளை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீரை பயன்படுத்;துபவர்கள் அதனை மிகவும் சிக்கனமாகவும் சரியான முறையில் முகாமை செய்தும் பயன்படுத்த வேண்டும். எங்களுடைய பழக்கவழக்கங்களினால் நாங்கள் நீரை வீண்விரயமாக்குவது அதிகமாக காணப்படுகின்றது.

நீரானது இலவசமாக கிடைப்பதனால் நாங்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. ஆகையால் நாங்கள் நீரை மிகவும் சிக்கனமாகவும் சிறந்த வகையிலும் பயன்படுத்துவது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.