மண் அகழ்வினால் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கும் மட்டக்களப்பு மாவட்டம் -எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் மண் அகழ்வு காரணமாக நிலக்கீழ் நீரின் அளவு கடுமையான முறையில் குறைந்துசெல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.

சர்வதேச குடிநீர் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
சர்வதேச குடிநீர் தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை வெல்லாவெளியில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் பாம் பவுண்டேசன அமைப்பினரும் யுஸ் எயிட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடுசெய்த சர்வதேச குடிநீர் தின நிகழ்வு வெல்லாவெளி கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக யுஸ் எயிட் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் அலினா ரெஸி,பாம்பவுண்டேசன் பணிப்பாளர் சுனில் டொம்பொல,பிரதேச சுகாதார அதிகாரி குணசேகரம்,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உலகளாவிய ரீதியில் உள்ள நீரில் 97.5வீதமான நீர் உவர் நீராககாணப்படுகின்றது.2.5வீதம் நன்னீராக காணப்படுகின்ற அதேவேளை இதில் ஐந்து சதவீதமான நீரே குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது.நீர்முகாமைத்துவம் சரியாக பேணப்படும்போதே அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப நீரை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.ஐ.நாவின் பரிந்துரைக்கு அமைய நீர் முகாமைத்துவம் செய்யும் பணிகளில் பொதுமக்களும் அரச நிறுவனங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் என்ன செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை ஆராயவேண்டும்.

இலங்கையினை பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளை நோக்கும்போது 14மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றது.அந்த 14மாவட்டங்களிலும் 33வீதமான மக்கள் குடிநீருக்காக போராடுகின்றனர்.இந்த மக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்திசெய்ய பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்கள் ஊடாக பல கோடி ரூபாக்கள் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 24ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது.இது வெறுமனே குடிநீருக்கான பாதிப்பு கணிப்பீடாகும்.இதில் விவசாயம்,மீன்பிடி,ஏனைய துறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை.சுத்தமான குடிநீரைப்பெறுவதில் மட்டக்களப்பு மக்கள் போராடிவருகின்றனர்.

அந்த அடிப்படையில் பாம்பவுண்டேசன் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீரை வழங்குவதற்கு பல்வேறு ஆய்வுகளை செய்து சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு நீர்வழங்கல் அதிகாரசபை மட்டுமே பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறான திட்டங்களை கொண்டுவந்தபோதிலும் மக்களை விழிப்படையசெய்யும் விடயத்தில் நாங்கள் பின்தங்கியுள்ளோம்.கிராமங்களில் சுத்தமான நீரை பெறும்போது அதனை வீண்விரயம் செய்யும் செயற்பாடுகள் அதிகளவில் நடைபெறுகின்றன.இவற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் அரச சுற்று நிருபங்களில் இருக்கின்றபோதிலும் அவற்றினை கட்டுப்படுத்தில் நாங்கள் பின்தங்கியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் குறைவான நிலையிலேயே இருக்கின்றது.மண் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துச்செல்வதன் காரணமாக நிலக்கீழ் நீரின் அளவு இன்னும் கடுமையாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதேபோன்று விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் குழாய் கிணறுகளை அமைத்துவருகின்றபோது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நீரைப்பெறுவது கடினமானதாக இருக்கும்.அதற்கான வழிவகைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.

குடிநீரை வழங்குவதற்காக கடந்த ஆண்டு கூட 16 பவுசர்கள்,ஒரு டக்ரடர் பவுசர் மற்றும் அதிகளவான நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.நிவாரண நடவடிக்கைகளுக்காக 147மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.26ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டத்திற்காக மில்லியன் கணக்கான பணம் ஒதுக்கீடுசெய்யப்பட்டன.

இந்த நிதிகள் அனர்த்தங்களை குறைப்பதற்காக,அனர்த்த குறைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்துவோமானால் நீண்டகாலத்தில் குடிநீர் உட்பட வாழ்வாதாரத்தினையும் கட்டியெழுப்புவதற்க உதவியாக இருக்கும்.

இந்த உலகத்தில் நான்கு நபர்களில் மூன்று பேர் சுத்தமான குடிநீருக்காக தினமும் போராடிவருகின்றனர்.எமது எதிர்கால சந்தியினரின் எதிர்காலம் நல்லதாக அமையவேண்டுமானால் இது தொடர்பான விழிப்புணர்வுகளை அனைத்து மட்டத்திலும் ஏற்படுத்தும்போது எதிர்காலத்தில் நீர்முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்கு அது உந்துசக்தியாக அமையும் என்றார்.