களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக்குழுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் (களுவாஞ்சிகுடி)இந்த ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக்குழுக்கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட திணைக்களத்தின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,உத்தியோத்தர்கள் என பலர் கலந்துகொண்;டனர்.

இதன்போது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுசெய்யப்பட்டதுடன் இதுவரையில் பூர்த்திசெய்யப்படாத திட்டங்களை பூர்த்திசெய்யுமாறும் பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

அத்துடன் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பதை தவிர்த்து அதனை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கோட்டைக்கல்லாறு பொதுமயானத்தினை பொதுமயானமாக வர்த்தமானி பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கும் பணிக்கப்பட்டது.

இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.