களுதாவளையில் விவசாயிகள் சுழல் காற்றினால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் புதன்கிழமை இரவு வீசிய மினி சூறாவளி காரணமாக தோட்டச்செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான விவசாயிகளைக்கொண்ட கிராமமாக களுதாவளை கிராமம் விளங்கிவருகின்றது.

பல்வேறு கஸ்டங்களுடன் தமது தோட்டச்செய்கைகளை மேற்கொண்டுவரும் களுதாவளை பிரதேச விவசாயிகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

களுதாவளை பகுதியில் விவசாயிகள் தமது தோட்டங்களில் அதிகளவான கொச்சிக்காய் செய்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் அறுவடையினை எதிர்பார்த்திருக்கும் வேளையில் வீசிய மினி சூறாவளி காரணமாக தமது கொச்சி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மினி சூறாவளி காரணமாக சில வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் பயன்தரு மரங்களும் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மினி சூறாவளி காரணமாக 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நஸ்ட ஈட்டினைப்பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.