சிரியாவுக்காக மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய தமிழர்கள்

மனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பினை சேர்ந்த கலைஞர்கள் சிலரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கலைஞர்களினால் பறை மேளம் முழங்க இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கே அந்த யுத்ததின் வலி தெரியும் இந்த நிலையில் சிரியாவில் முன்னெடுக்கப்படும் அரச படையெடுப்பினால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மீண்டும் ஒரு மனித பேரவலம்வேண்டாம்,மக்களை கொல்வதை நிறுத்து,வல்லரசாதிக்கப்போட்டியில் சிறுவர்களை கொல்லாதே,சிரியாவில் யுத்த நிறுத்தம்வேண்டும்,2009முள்ளிவாய்க்கால் 2018சிரியா?போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

மனித குலத்தினை சேர்ந்த எவரும் இந்த யுத்ததினை ஆதரிக்கமாட்டார்கள்.மௌனம் காக்காமல் யுத்ததினை நிறுத்துவதற்கு அனைவரும் குரல்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.