மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 51வீதமான மாணவர்கள் சித்தி –வலய கல்வி பணிப்பாளர்

மட்டக்களப்பு மேற்குவலயத்தில் 51,வீதமான மாணவர்கள் வெளியாகிய கல்விப்பொது தராதர சாதாரணதரபரீட்சையில் சித்திபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலயகல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

கடந்த வருடம் 2016 கல்விப்பொது தராதர பரீட்சை பெறுபேறு 2017ல் வெளிவந்தபோது மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 21,வீதமான

மாணவர்கள் மட்டுமே சித்திபெற்று உயர்தர வகுப்பு படிப்பதற்கு தகுதிபெற்றனர் ஆனால் இந்தமுறை 51,வீதமான மாணவர்கள் உயர்தர வகுப்பில் கல்விகற்க தகுதி பெற்றுள்ளனர்,

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 30,வீதம் அதிகரித்துள்ளமையை காணமுடிகிறது,

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் அற்பணிப்புடன் கூடிய சேவை மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ள அதிபர் ஆசிரியர்கள் மற்றும் வலய கல்வி திணைக்கள அனைத்து அலுவலர்களின் சேவைமனப்பாங்கு எல்லாவற்றையும் பாராட்டப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால முப்பது வருட ஆயுதப்போராட்டம் இடம்பெற்ற காலத்தில் இப்பகுதி முழுமையாக இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் பல உயிர் இழப்புக்களையும் தியாகங்களையும் சந்திதது மட்டுமன்றி வறுமைக்கோட்டில் மக்கள் வாழும் ஒரு பிரதேசமாகும்.

இதேவேளை மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கப்பட்டதன் பின்பு, மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் ஓரிரு 8ஏ தர சித்திகளும் ஏனைய ஒரு தர சித்தியும் இதுவரை பெறப்பட்டு வந்துள்ளன.

குறித்த கோட்டத்தில் ஒன்பது கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தினைக் கொண்ட பாடசாலைகள் உள்ளன. இவற்றில்  வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 6பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் 8ஏ தர சித்திகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இரு மாணவர்கள் 8ஏ,1வீ தர சித்திகளையும், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஒரு மாணவன் 8ஏ,1வீ தர சித்திகளையும், மற்றுமொரு மாணவன் 8ஏ, 1சீ தர சித்திகளையும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவன் 8ஏ,1எஸ் தர சித்திகளையும், அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் 8ஏ,1எஸ் தர சித்திகளையும், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் ஒருவரும், கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர் ஒருவரும் 8ஏ தர சித்திகளையும் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முழுமையாக கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை கொண்டுள்ள நிலையிலும், கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த சூழலிலும், அன்றாடம் கூலிவேலைகளைள செய்து குடும்பத்தினை அதிகம் கொண்ட பிரதேசமாக உள்ள நிலையிலும் கல்வியில் மெதுமெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.