தேசிய கட்சிகளில் உள்ள தமிழர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையுமாறு அழைப்பு

தேசிய கட்சிகளில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வரவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஐந்து வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக செயற்பட்டுவந்தேன்.நான் உடல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இருந்தாலும் உள்ளம் தமிழ்; தேசிய கூட்டமைப்புடன் இருக்கவேண்டும் என்ற உணர்வினையே எப்போதும் வெளிப்படுத்திவந்தது.

இந்த நிலையில் கடந்த 2017 டிசம்பர் 13ஆம் திகதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி நான் கடந்த இரண்டுவருடமாக மேற்கொண்டுவரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு ஊடாக எனது பணியை முன்னெடுத்துவந்தேன்.

கிராமிய ரீதியான வகையில் இந்த உள்ளுராட்சிசபை தேர்தல் ஊடாக தமிழ் மக்களின் பலத்தினை வெளிப்படுத்தவேண்டிய மிகவும் முக்கியமாகம் வாய்ந்த காலமாக இந்த காலப்பகுதியுள்ளது.இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.அதன் காரணமாகவே நான் தமிழ்தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தமிழ் மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலும் சர்வதேசமும் இலங்கையும் பார்த்துக்கொண்டுள்ளது.இந்த நிலையில் நாங்கள் ஒற்றுமையினை வெளிப்படுத்தவேண்டிய மிகவும் முக்கியமான காலத்தில் இருக்கின்றோம்.தமிழ்மக்களின் ஆணை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே உள்ளது என்பதை வெளிப்படுத்தவேண்டிய மிகமுக்கியத்துவமான காலமாகும்.

வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்குரிய உள்ளுராட்சிசபைகளை இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும்.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படும் தமிழ் வேட்பாளர்கள்வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளில் இருந்து தமது பகுதிகளுக்கு என்ன அபிவிருத்தியை செய்யமுடியும் என்பதை சிந்திக்கவேண்டும்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டிய நேரத்தில் அதற்கு எதிரான பங்காளர்களாக நான் இருக்கவில்லை.இந்தவேளையில் சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே இலங்கை அரசாங்கத்திற்கான அழுத்தங்களை வழங்கமுடியும்.

காலம் காலமாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மைத்திரி-சம்பந்தன் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் குறுகிய காலமே பாராளுமன்ற ஆட்சிக்காலம் இருக்கின்றது.இந்த காலத்திற்குள் தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வுத்திட்டம் பெறப்படவேண்டும் அதற்கு சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்தவேண்டிய அனைவருக்கும்உள்ளது. தேசிய கட்சிகளில் உள்ள எமது உறவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் வந்து இணைந்து சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்தவேண்டும்.

தேசிய கட்சிகளில் உள்வாங்கப்படும் தமிழ்பிரதிநிதிகள் தங்களது அடையாளங்களுக்கு மட்டுமே அந்த கட்சிகள் பயன்படுத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பெரும்பான்மை கட்சிகளில் நாங்கள் இணைந்துசெயற்படும்போது அது எமது சகோதர இனத்திற்கே அது சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது.அவர்களுக்கே அதன் மூலம் கூடிய நன்மைகிடைக்கின்றது.

மாற்று அரசியல் நிகழ்ச்சி நிரலில் உள்ளவர்கள் இன்றைய நிலையினை உணர்ந்துசெயற்படவேண்டும்.அற்பவிடயங்களுக்குபிரிந்து நிற்காமல் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றினையவேண்டும்.

நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தேர்தல்களில் வெற்றிபெற்றால் நான்  கட்சிமாறி விடுவேன் என சிலர் கூறிவருகின்றனர்.நான் எந்த தேர்தல் தொடர்பிலும்சிந்திக்கவில்லை.ஆனால் நான் வீட்டிற்குள்வந்துவிட்டேன் இனி வீடே எனது இடம்.வேறு எங்கும் செல்லமாட்டேன்.