எருவில் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் மிகவும் பழமையான ஐயப்பர் ஆலயங்களும் ஒன்றான மட்டக்களப்பு,எருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பர் சுவாமி ஆலயத்தின் புனராவர்த்தன,அஷ்டபந்தன,பஞ்சகுண்டபக்ஸ,பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச இந்துமதகுருபீடாதிபதி ஆன்மீகஅருள்ஜோதி ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் கடந்த 31ஆம் திகதி கிரியைகள் மஹா கும்பாபிசேக ஆரம்பமாகியது.

சனிக்கிழமை காலை புண்ணியாகவாசனம், ஆசார்யசந்தி, யாகபூஜை, திருமுறை பராயணம் என்பன நடைபெற்று அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான அடியார்கள் பங்குகொண்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை புண்ணியாகம்,யாகபூஜை,அஷ்டோத்திர சதநாக ஹோமம்,மகாபூர்ணாகுதி,தீபாராதனை,வேதஸ்தோத்திர பாராயணம், உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வேதகோச நிர்த்தகீத மங்கள பேரி வாத்தியங்கள் முழங்க அடியார்களின் சுவாமியே சரணம் ஐயப்பா கோசத்துடன் கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஸ்தூபி மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்தூபி கும்பாபிசேகத்தினை தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாகிய ஐயப்ப சுவாமிக்கு கும்ப அபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.