Breaking News

அரசியலை சாக்கடையாக்க மாற்றுவதற்கான பொறுப்பினை மக்களே ஏற்கவேண்டும் -உ.உதயகாந்த்

அரசியலை சாக்கடையாகவும் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாகவும் மாறுவதற்கான அடித்தளத்தினை மக்களே அமைத்துக்கொடுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபைத்தேர்தலில் சுயேட்சை 05இன் பிரதம வேட்பாளராக போட்டியிடும் ஊடகவியலாளர் உ.உதயகாந்த் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஊடக துறையின் வாயிலாக மக்களின் துன்பியல்கள் பலவற்றை உலகறியச் செய்து அவற்றில் பலவற்றிற்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் மீண்டுமாக அரசியல் பிரவேசத்தின் ஊடாக எமது மக்களுக்கான பணியை தொடர்ந்துமாக செய்வதற்காக துடிப்புள்ள இளைஞர்களாகிய ஒரு சில ஊடகவியலாளர்கள் நாம் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் இம்முறை களமிறங்கியிருக்கின்றோம்...

நாங்கள் பண பலம் படைத்தவர்கள் அல்ல ஏனைய கட்சிகள் போன்று மறைமுகமாக அன்பளிப்புக்களை வழங்கி வாக்குக்களை சூரையாடுவதற்கு....
அரசியல் ஒரு சாக்கடை .... அதில் உள்ளவர்கள் ஊழல்வாதிகள் ... என்றெல்லாம் நாம் பல சந்தர்ப்பங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துரையாடிய சந்தர்ப்பங்கள் பல. .ஆனால் சற்று சிந்தியுங்கள் அரசியலை சாக்கடை என்றும் அரசியல் வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் நாம் விமர்சிப்பதற்கு நாமே தான் காரணம் அது மறுக்க முடியாத உண்மை....

எவ்வாறு என கேட்கின்றீர்களா?அதை நானும் தேர்தலில் இறங்கிய பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்றார் எனில் அவர் எமக்காக சேவையாற்ற கூடிய வல்லமை உள்ளவர் என நாம் இனம் கண்டால் அவரை நாம் அனுகி நீங்கள் உண்மையாகவே எமக்கும் எமது பிரதேசத்திற்கும் கடந்த காலங்களில் சேவையாற்றியிருந்தீர்கள்.. அதனால் தங்களை போன்றவர்கள் நிட்சயமாக சபைக்கு போக வேண்டும் அதற்காக எமது ஆதரவு நிட்சயமாக உங்களுக்கு உண்டு என கூறுவதே ஆரோக்கியமான கருத்தாகும்...

ஆனால் எம்மத்தியில் என்ன நடக்கின்றது.பொது மக்களாகிய நாம் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவரை அனுகி எமக்கு என்ன தருவீர்கள் என தேர்தல் திகதிக்கு முன்னரே அரசியல்வாதிகளிடம் பேரம் பேசுகின்றீர்கள்.....
இது இவ்வாறு ஒரு புறமிருக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்க்கும் அனைத்து வேட்பாளர்களும் வட்டிக்கு பணம் தேட ஆரம்பிப்பார்கள்.அது அவ்வாறு இருக்க எமது மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அவ்வாறு பெற்றுக் கொண்ட கடனை ஈடு செய்வதற்கு எமது வரிப்பணத்தால் செயற்படுத்தவிருக்கும் வீதிகள், காண்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களில் இருந்து ஒப்பந்தகாரர்கள் வழியாக உதவிகளை பெற வேண்டிய துற்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அவ்வாறு நிகழும் சந்தர்ப்பங்களின் பிரதிபலிப்பே தரமற்ற அபிவிருத்திப் பணிகள்.அதே போன்று தேசிய கட்சிகளின் நிதிகளை பெரும்பாண்மை சமூகத்திடம் இருந்து பெற்று மக்களுக்கு அன்பளிப்பு வழங்கி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எமது வாக்குக்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களிற்கு அடகு வைக்கும் நிலை ஏற்படுவதனால் இவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்...

அது மட்டும் அல்லாமல் எமது மக்களை கடந்த 30 வருடங்களாக மாறி மாறி கொன்று குவித்த கட்சிகளிடம் இருந்து அன்பளிப்புக்களை பெற்றுக் கொண்டதன் விளைவாக ஈழம் எதிர்பார்க்கும் நாம் ஈழக் கொள்கைக்கு எதிராகவே வாக்களித்த பெருமை எம்மை வந்து சாரும் சந்தர்பம் எமக்கு ஏற்படும்.
எது எவ்வாறு இருப்பினும் தற்போது புரிகின்றதா அரசியலை சாக்கடையாகவும் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாகவும் சித்தரித்த நாமே தான் அதற்கான அடித்தளத்தினை அமைத்துக் கொடுக்கின்றோம்.

இம்முறை நடை பெறவிருக்கும் தேர்தலையாவது ஊழல் அற்ற தேர்தலாக நடாத்துவதற்கும் , அன்பளிப்புக்களை வழங்கி வாக்கு சுவீகரிக்கும் வேட்பாளர்களை நிராகரி க்கும் தேர்தல் களமாக மாற்றுவதற்கும் புதியதொரு மாற்றத்திற்கான ஊழல் அற்ற மாநகரை உருவாக்க உங்களது பொன்னான வாக்குகளை எமக்கு அளிப்பதன் ஊடாக சாக்கடை அற்ற அரசியல் களத்தை உருவாக்குவோம்.


No comments