பிள்ளையான் வாகனம் வழங்காத காரணத்தினாலேயே யேகேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வந்தார் –பிரசாந்தன்

2010ஆம் ஆண்டு பிள்ளையான் ஒரு வாகனம் கொடுக்க வில்லையென்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் அரசியலுக்கு வந்தார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாங்காடு,தேற்றாத்தீவு வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பா.அருள் என்னும் வேட்பாளரின் அலுவலகம் நேற்று திங்கட்கிழமை(15-01) மாலை தேற்றாத்தீவு பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சிவநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன்,

எமது தலைவர் சந்திரகாந்தன் அவர்களின்; தலைமையில் எல்லா மக்களும் படகை ஆதரிக்கின்ற நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தூர நோக்குடைய சிந்தனையினை விமர்சிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர்.

2008ஆம் வருடம்  கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு போராளிக்கு கொடுப்பதாக சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக பிள்ளையானுக்கு வழங்கியதாக யோகேஸ்வரன் ஐயா அவர்கள் கூறியிருக்கின்றார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசியிருக்கின்றார்.

2008ஆம் வருடம் 43000வாக்குகளைப் பெற்று கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்குமாகாண முதலமைச்சரானார். அவர் முதலமைச்சராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை செய்து காட்டியதுடன் மாற்று சமூகத்திடம் சோரம் போகாமல் மாற்று தலைவர்களிடம் கையேந்தாமல் தமிழர்களை தலைநிமிர்ந்து வாழவைத்தார்.

ஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் 45ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கின்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தன் ஐயாவை நியமித்திருக்கின்றார்கள்.சம்பந்தன் ஐயாவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமித்தது எந்த சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக? என நான் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.

தமிழர்களின் வாக்குகளையும் ஆணையையும் பெற்று 16ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது எதற்காக? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை என்ன என அவர்களுடைய உறவினர்கள் 325நாட்களாக அழுது புலம்பிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அதனை மறைப்பதற்காகவா, 124அரசியற் கைதிகள் இன்று சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் விடுதலை பற்றி பேசக்கூடாது என்பதற்காகவா, தமிழர்களுக்கு எது நடந்தாலும் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவா அவருக்கு  எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது?
45ஆசனங்களை வைத்திருப்பவர்களுக்கல்லவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்திருக்க வேண்டும். வெறும் 16ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது தான் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட செயல் என்பதை  என்பதை யோகேஸ்வரன் ஐயா புரிந்து கொள்ள வேண்டும். 

கிழக்குமாகாண முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தபோது முதலமைச்சர் மாநாட்டிலும் கொரியாவிற்கு இளைஞர்களை வேலைவாய்ப்பிற்காக அனுப்பினோம். கொரியாவிற்கு இளைஞர்களை அனுப்பும் செயற்பாட்டிலும் ஊழல் நடந்திருப்பதாக யோகேஸ்வரன் ஐயா கூறியிருக்கின்றார். கிழக்கு மாகாண சபை மூலம் கிட்டத்தட்ட 1000 இளைஞர்களுக்கு நாங்கள்

வேலைவாய்ப்பு வழங்கியிருக்கின்றோம்.; நாங்கள் வேலைக்காக ஒரு ரூபாயாவது வாங்கியிருக்கின்றோம் என ஒரு இளைஞர் சொல்லட்டும், நாங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றோம். அவரால் அவ்வாறு சொல்ல முடியுமா? எந்த இளைஞரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். தமிழர் என்பதற்காக அந்தக் குற்றத்தினை விசாரிக்க வேண்டாமென விட்டுவிட்டார்களாம். குற்றத்தை விசாரிப்பது நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையா? விசாரணைக்குழு அமைத்து அந்த ஊழலை கண்டுபிடித்து அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றது. அதனை செய்யவிடாமல் தடுக்கின்றார் என்றால் பாரிய ஊழலை தடுக்கின்ற அதிகாரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவர்கள் பெற்றிருக்கின்றாரா?

ஹிஸ்புல்லா அவர்களுக்கு மட்டக்களப்பில் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு பிள்ளையான் தான் காணி ஒதுக்கிக் கொடுத்தாராம் என கூறியிருக்கின்றார்.

அந்தக்காணி மகாவலி அதிகாரசபைக்குரிய காணியாகும். அந்த வேளையில் மகாவலி அதிகாரசபை அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன அவர்களாவார். ; மகாவலி அதிகாரசபை என்பது மத்திய அரசின் கீழ் வருகின்ற சபையாகும். அந்தக் காணி வழங்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் யோகேஸ்வரன் ஐயா ஆவார். அவர் இருக்கின்ற நிலைமையினை அவர் உணர்ந்து கொள்ளவில்லை. மாகாணசபைக்கும் மகாவலி அதிகாரசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லையென்பது கூட தெரியாத நிலையில் அவர் உள்ளார்.

இவ்வாறு மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெறவேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.இவ்வாறுதான் 1976ஆம்ஆண்டு தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் எமது தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொந்த சிறிய தந்தையாகும்.2010ஆம் ஆண்டு முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தபோது அவரிடம் வந்து உங்களுக்கு தேர்தலில் நூறு வீதம் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றேன் எனக்கு ஒரு வாகனம் தாருங்கள் என கேட்டிருந்தார்.பிள்ளையான் ஒரு வாகனம் கொடுக்க வில்லையென்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் அரசியலுக்கு வந்தார்.இன்று இரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டுள்ளார்.இது யார் கொடுத்த ஆணை.

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.வாய்க்குள் வரும் போலியான கருத்துகளை கூறுவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.மக்களை நல்வழிப்படுவதற்கு பதிலாக மக்களை தவறான வழியில் வழிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு சவாலான தேர்தல்.கிழக்கில் தமிழர்கள் இருக்கின்றார்களா,?இருப்பை பாதுகாக்கப்போகின்றார்களா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல்.இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டும்.