வெண்ணை திரண்டுவரும் போது தாழியை உடைக்க முயற்சிக்க வேண்டாம். இரா.சாணக்கியன் தெரிவிப்பு


சுயலாப அரசியல் விளம்பரத்திற்காக தேசியகொடி பிரச்சினையை பொது மேடைகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பேசுவது பொருத்தமற்றது என தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,


இலங்கையின் தேசிய கொடியில் காலங்காலமாக பிரச்சினை இருந்து வருகின்றமையும்,  இதனை சிறுபாண்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சினை பல  இடங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்துள்ளது. அதற்காக அதனை பொது மேடைகளில் தனிநபர்கள் பேசுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாகவே கொள்ளப்படும்.
அண்மையில் நான் பாராளுமன்றத்திற்கு சந்திப்பொன்றுக்கு சென்றிருந்த போது 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக கட்சி பேதமின்றி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சாசனத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள சாதக, பாதகமானவை தொடர்பாக ஆராய்ந்து அரசியல் சாசனத்திற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வழி. இவ்வாறான வழிகளை தமிழ் பிரதிநிதிகளும் கையாண்டால் தமிழ் மக்களின் அதிக பிரச்சினைகள் தீர்க்கப்படும். அதே போன்று தேசியகொடி சம்பந்தமான பிரச்சினையையும் அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடி தீர்வொன்றினை பெறலாம்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாக தென்னிலங்கையில் முரண்பாடன விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்கும் செயற்பாடு என பலர் கூறுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் கூட இதனை எதிர்க்கின்றார் என்றால் இந்த அரசியல் சாசனத்தில் முன்னர் உள்ள அரசியல் யாப்பில் உள்ளதை விட தமிழ் மக்களுக்கு ஏதோவொன்று  மேலதிகமாக  வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் இதனை எதிர்த்துகொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள், நடுநிலையான சிங்கள மக்கள் இணைந்தே இந்த அரசியல் சாசனத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு உள்ள நிலையில் தேசியகொடி சம்பந்தமான பிரச்சினை போன்ற வேறு பிரச்சினைகளை இக்காலத்தில் பேசுவது பொருத்தமற்றது. அவ்வாறு முன்வைப்பதென்றால்  கட்சி தலைமையூடாக அதற்கான முறைமையூடாக இவ்வாறான பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். தனிநபர்கள்  இவ்வாறு அரசியல்மேடைகளில் பேசுவதனால் அரசியல் சாசனம் வெற்றி பெறாமல் போவற்கான ஏதுவான காரணங்களில் ஒன்றாக அமைவதுடன் நிராகரிப்பதற்கு இவ்வாறான பேச்சுக்கள் மேலும் வலுக்கச்செய்யும். ஆகவே சுயலாப அரசியல் விளம்பரங்களுக்காக கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியற் தீர்வொன்றினை பெற இனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.