வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்.கடந்த சில நாட்களாக தெற்கு அந்தமானிற்கு தென்கிழக்காக கடந்த 01ம் திகதி காணப்பட்ட தாழமுக்க பிரதேசமானது (Low Pressure Area) இலங்கையிலிருந்து 1300 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் தென்கிழக்கு வங்காளவிரிகுடாப் பகுதியில் காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கமாக (Depression)  வலுவடைந்து பின்னர் அடுத்த 48 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக (Deep Depression)  மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்னர் இன்று( 05) மற்றும் 06ம் திகதிகளில் இலங்கை கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 03 நாட்களில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராக்கும் இடையில் கரையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தினால் இலங்கையிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் முக்கியமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் நாளை முதல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான அதிகரிப்பதுடன் வங்காளவிரிகுடாப் பகுதியில் இந்தக் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசும்.

பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.
எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்களின் கடல் நடவடிக்கை பாதுகாப்பற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Attachments area