மட்டக்களப்பு கல்வி வலய சுகாதார கழக பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார கழகங்களுக்கான பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இந்த நிகழ்வு மட்டக்களப்ப வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தி கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் திருமதி சுதர்சினி இராஜேந்திரன்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன்,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலக கணக்காளர் கே. சபேஸசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலைகளில் சுகாதார முறையை பேணும் வகையில் இந்த சுகாதார கழகங்கள் அமைக்கப்பட்டு சுகாதார முறைகள் பேணப்பட்டுவருவதுடன் அவை சுகாதார பிரிவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் சிறப்பான முறையில் இயங்கிய பாடசாலைகளும் சுகாதார கழக மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்ப்ட பாடசாலைகளில் உள்ள சுகாதாரக்கழகங்கள் தங்கம்,வெள்ளி,வென்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதன்போது சுமார் 726 மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன.