மட்டக்களப்பில் நடைபெற்ற நாவலர் மாநாடு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (01-12)காலை நாவலர் மாநாடும் சிவதொண்டர் ஆன்மீக எழுச்சி சிந்தனைக்களமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அகில இலங்கை இந்துமாமன்றமும் மட்டக்களப்பு மாவட்;ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தின.

இதனை முன்னிட்டு இன்று காலை கல்லடி,உப்போடை பேச்சியம்மன் ஆலய முன்றிலில் இருந்து நாவலர் திருவுருவம் தாங்கிய ஆன்மீக ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் மாநாடு ஆரம்பமானது.

இந்த நிகழ்வுக்கு முன்னிலையாக நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்;ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்ற உபதலைவரும் யாழ் இந்து ஆராய்ச்சி நிலைய கௌரவ இயக்குனருமான சைவஞானபானு கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நல்லை ஆதினத்தின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான நிகழ்வில் சிவதொண்டர் சிந்தனைக்களம் தொடர்பிலும் ஆறுமுகநாவலரின் சமய வளர்ச்சி,கல்வி வளர்ச்சி உட்பட அவரின் சமூக செயற்பாடுகள்,ஆன்மீக செயற்பாடுகள் தொடர்பிலான விசேட உரைகள் நடைபெற்றன.