மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக எம்.உதயகுமார் மத வழிபாடுகளை தொடர்ந்து பதவியேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.உதயகுமார் இன்று வியாழக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதற்கு முன்பாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அங்கு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் மாவட்ட செயலகத்திற்கு சென்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர  சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில்  பல்வேறு  அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு, கிழக்கு மாகாண  உள்ளூராட்சி  உதவி  ஆணையாளராகவும் கடமையாற்றினார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்சரவை பரிந்துரை செய்து  அனுமதி  வழங்கியுள்ளது.

இதேவேளை, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு பொது அமைப்புகள்,மதத்தலைவர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.