“என்னில் இருந்து எமக்கு “ என்னும் திட்டம் எதிர்கால சமூகத்தின் வழிகாட்டல்

“என்னில் இருந்து எமக்கு “ என்னும் அடையில் சிறந்த சீரான சமுதாயத்தினை கட்டியெழுப்பும் வகையிலான விசேட திட்டத்தினை சுவாமி இராமதாஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

இன்று வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகளினால் பல்வேறு வகையான பிரச்சினைகள் எழுவதுடன் அவர்களினால் சமூகத்திற்கு பல்வேறு தாக்கங்களும் ஏற்படுகின்றன.

இவ்வாறனவர்களை உருவாக்கும்போது சிறந்த நற்பண்புகளை கல்வியின் ஊடாக ஏற்படுத்தும் வகையில் சுவாமி இராமதாஸ் நிறுவனத்தின் கருணாலயம் இந்த திட்டத்தினை மட்டக்ளப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவருகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கான செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன.

கருணாலய ஸ்தாபகர் வி.பி.பரமலிங்கம் அவர்களின் ஆதரவுடன் நடைபெற்ற செயலமர்வில் கருணாலயத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் பிரதி அதிபர்களான பா.பரமேஸ்வரன்,செல்வி அமுதா நாகலிங்கம்,விரிவுரையாளர் கே.கோமளேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வளவாளர்களாக கருணாலயத்தின் உத்தியோகத்தர்களான திருமதி ரூ.மீரா,கே.ராமச்சந்திரன்,செல்வி பி.ரேகா ஆகியோர் கருத்துரைகளையும் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கத்தினையும் வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை சீர்செய்வதற்கு பாடசாலை மட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி ஆசிரியர்களுக்கு இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

கடந்த ஒன்பது மாதங்களாக இவ்வாறான பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டுவருவதாகவும் இதுவரையில் 600மாணவர்கள்,700ஆசிரியர்கள்,பயிற்சி ஆசிரியர்கள்,260பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 62 பாடசாலை அதிபர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கருணாலயத்தின் முகாமையாளர் இரா.முருகதாஸ் தெரிவித்தார்.

இன்று அலுவலகங்கள்,வைத்தியசாலைகள் உட்பட பல்வேறு உயர் நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களை மதிக்கும் தன்மை குறைவான நிலையிலேயே இருக்கின்றது.

அதற்கு காரணம் அவர்களிடம் கற்கும் திறமைகள் இருந்தபோதிலும் அவர்களிடம் பண்பாடுகளும் மனித நேயமும் இல்லாத நிலையிருக்கின்றது.அதற்கு பாடசாலை மட்டத்தில் கல்வியுடன் ஆன்மீகத்துடன் திறமையுடன் பண்பினையும் வளர்க்கவேண்டும்.அவ்வாறான நிலையிலேயே அவர்கள் உயர் நிலைக்கு வரும்போது பண்பானவர்களாக சமூகத்தில் வலம்வரமுடியும்.

அத்துடன் பல குற்றச்செயல்களும் விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறுவதற்கு அடிப்படைக்காரம் பாடசாலைகளில் சிறந்த பண்புகள் ஊட்டப்படாமை மிக முக்கிய காரணமாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெறுமனே பாடவிதானங்களை மட்டும் இலக்காக கொண்டு மாணவர்கள் மத்தியில் உள்ள கற்கும் திறன்கள் மட்டுமே வளர்க்கப்படுவதுடன் அவர்கள் மத்தியில் பண்கள் வளர்க்கப்படுவது மிகவும் குறைவானதாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் பாடசாலை மட்டத்தில் இந்த நிகழ்வுகளை முன்கொண்டுசெல்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வடகிழக்கில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு இளைஞர் யுவதிகள் மத்தியில் கடும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்கின்றது.இன்று சமூகத்தில் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்திவருகின்றது.நவீன தொழில்நுட்பம்,தொடர்புசாதனங்கள் என இன்றைய இளைஞர் யுவதிகளை சுற்றி வலைப்பின்னல் போடப்பட்டுள்ளது.

அவற்றில் இருந்து அவர்களை மீட்டு அவர்களின் திறமைகளுடன் அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்கவேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய சமூகத்திடம் சுமத்தப்பட்டுள்ளது.அவற்றினைசெய்யத்தவறினால் எதிர்காலத்தில் வழிமாறிய சமூகம் ஒன்று உருவாகக்கூடிய நிலையே இருக்கின்றது.

பாடசாலை மட்டங்களில் இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.ஒரு குழந்தைக்கு எவ்வாறு அவனிடம் உள்ள திறமையினை வெளிக்கொணர முயற்சிகளை செய்கின்றமோ அந்தளவுக்கு அவனிடம் நல்ல பண்புகளையும் வெளிக்கொணர்வதற்கான முயற்சிகளையும் செய்யவேண்டும்.

இன்றைய நிலையில் அழுத்தங்களினாலும் பலரின் வாழ்க்கை பெரும் சுமையாக மாறிவருகின்றன.நல்ல பண்புகளை அவர்களிடம் வளர்க்காத நிலையே இவ்வாறான அழுத்தங்களுக்கு காரணமாக அமைகின்றது.

எனவே இவ்வாறான நிலையில் இருந்து எதிர்கால சமூகத்தினை மீட்கவேண்டுமானால் பாடசாலைகளில் கல்வியுடன் நல்ல பண்புகளையும் திறன்களையும் வளர்ப்பதற்கான வேலைத்திட்;டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அதற்கான முழு முயற்சியை மட்டக்களப்பு ஏறா{ர்பற்று பிரதே செயலகத்திற்குட்பட்ட மைலம்பாவெளியில் உள்ள சுவாமி இராமதாஸ் நிறுவனம் (கருணாலயம்)முன்னெடுத்துவருகின்றது.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு அதிபரும் இந்த செயற்றிட்டத்தில் இணையவேண்டும்.அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஒவ்வொரு மாணவரும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும்போது எதிர்காலத்தில் நல்ல பண்புகளையும் நல்ல ஆரோக்கியமான சமூகத்தினையும் கட்டியெழுப்பமுடியும்.