மட்டக்களப்பில் வாய்த்தர்க்கத்தில் தள்ளிவிடப்பட்டவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதானவீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் ஒருவர் பிடித்து தள்ளப்பட்டபோது முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான மு.துரைராஜசிங்கம்(55வயது) என்பவரே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பிரதானவீதியின் ஓரத்தில் இருவர் மதுபோதையில் ஒருவருக்கொருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ஒருவரைப்பிடித்து மற்றவர் தள்ளிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதியவர் தலையில் அடிபட்டு கீழேவிழுந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொலையா? விபத்தா? என்ற கோணத்தில்காத்தான்குடி பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.