இன,மத வேறுபாடுகளின்றி கடமையாற்றுவேன் -மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபர்

ஒரு பிரதேசம் மட்டும் அபிவிருத்திசெய்து ஏனைய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டால் அது அபிவிருத்தி அல்ல.அனைத்து பிரதேசங்களும் அபிவிருத்தியடையும்போதே அது அபிவிருத்தியாக கருதப்படும்.அனைத்து பகுதிகளிலும் சமாந்தரமான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றதன் பின்னர் சர்வமத பிரதிநிதிகளையும் சந்தித்து ஆசிபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்ற மா.உதயகுமாரை மட்டக்களப்பில் உள்ள தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வரவேற்பளித்தனர்.




மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசனுக்கு சென்று அங்கு சுவாமி பிரபுபிரபானந்தஜி மகராஜிடம் ஆசிபெற்ற அவர் விசேட”ஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டதுடன் சுவாமியையும் சந்தித்து கலந்துரையாடினார்..

மட்டக்களப்பு ஜெயந்திபுரமபௌத்த மத்திய நிலையத்தில் அரசாங்க அதிபருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் அவருக்கு பௌத்த மதகுருவினால் ஆசியும் வழங்கப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் உள்ள ஜாமியுஸ்யலாம் ஜ}ம்ஆ பள்ளிவாயலிலும் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் அவருக்கான ஆசிவேண்டி பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதவியேற்பை மேற்கொண்டதன் பின்னர் விசேட செய்தியாளர் சந்திப்பினையும் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்’கொண்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டம் எனக்கு புதியது அல்ல.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடமையாற்றியவன் என்ற வகையில் எனது கடமையினை சிறப்பாகஆற்றமுடியும்.பல இன பல மொழி பேசும் பல மதங்களைக்கொண்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர்.அவர்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்றனர்.

வறுமை தவிர்ப்பு,சுற்றாடல் பாதுகாப்பு,மக்களினுடைய வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.அரசாங்கத்தின் செயற்பாடுகளை பக்கச்சார்பின்றி,இனமதபேதமின்றி அனைவருக்கும் சேவைசெய்வதற்கு தயாராகவிருக்கின்றேன்.

வெறுமனே நிதியினை செலவிடுவதனால் மட்டும் வறுமை நீங்கிவிடப்போவதில்லை.அந்த நிதியினை வினைத்திறன் மிக்கதாக பயன்படுத்தும்போதே வறுமை தவிர்க்கப்படும்.

குறிப்பாக வருமானம்பெறப்படும்போது அது சேமிக்கப்பட்டு முதலீடுகளாக மாற்றப்பட்டு அதன் மூலம் செலவுகள் செய்யப்படும்போது இலாபம் ஈட்டப்படுவதுடன் வறுமை நிலையும் நீங்கும்.அதேபோன்று கல்வியறிவு குறைவான நிலையும் இந்த வறுமைக்கு காரணமாக இருக்கின்றது.அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் வழங்கப்படும்போது வறுமை நிலையினை குறைக்கமுடியும்.

எந்த அபிவிருத்தியும் இரு பிரதேசத்தில் சமாந்தரமாக செய்யப்படும்போதே அது அபிவிருத்தியாகும்.ஒரு பிரதேசத்தினை அபிவிருத்தி செய்து இன்னுமொரு பிரதேசம் புறக்கணிக்கப்பட்டால் அது அபிவிருத்தி அல்ல.சமாந்தரமாக அபிவிருத்திகளை செய்வதற்கு நாங்கள் முயற்சிப்போம்.