காஞ்சிரங்குடா விபத்தில் சிறுமி படுகாயம் -பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் சிறுமி ஒருவரை மோதியதன் காரணமாக படுகாயமடைந்த நிலையில் மண்டபத்தடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளையில் அப்பகுதியை சேர்ந்த மக்களினால் கன்டர் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் காஞ்சிரங்குடா பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்ற 12வயது சிறுமியை மண் ஏற்றிவந்த கன்டர் வாகனம்  மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த சிறுமி வவுணதீவு மண்டபத்தடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்களினால் விபத்தினை ஏற்படுத்திய கன்டர் வாகனம் தாக்குதலுக்குள்ளான நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் மேலதி பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்திற்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை காணப்படுவதுடன் பதற்றத்தினை தணிக்கும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.