எல்லை பிரிப்புக்கு எதிராகவும் புதிய நகரசபை கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்க கோரியும் குறித்த பகுதிகளில் உள்ள சில பகுதியை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.

எங்களை காத்தான்குடியுடன் இணைக்காதீர்கள்,தமிழரின் பாரம்பரியத்தினை அழிக்காதீர்கள்,நில,நிர்வாக ஆக்கிரமிப்பிபை தடுத்து நிறுத்துங்கள் என்ற தலைப்புடன் இந்த போராட்டம்முன்னெடுக்கப்பட்டது.

சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள்,மகளிர் சங்க உறுப்பினர்கள்,இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிரிக்காதே பிரிக்காதே எமது எல்லைகளை பிரிக்காதே,எமக்கு தனியான நகரசபை வேண்டும்,எமது பகுதியை இன்னுமொரு பகுதியுடன் இணைப்பதை ஏற்கமாடோம் போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியான பகுதி தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதுடன் அங்கு 13க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளும் 25000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.இதனை தனி நகரசபையாக உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இப்பகுதியில் ஒரு இஞ்சி நிலத்தையாவது வேறு பிரதேசத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவ்வாறான நடவடிக்கைள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து கவன ஈர்ப்பு பேரணியானது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியுடாக மஞ்சந்தொடுவாய் வரையில் சென்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வரையில் நடைபெற்றது.

கல்லடியை தனி நகரசபையாக மாற்றுங்கள்,அரசே தமிர்களின் ஓலம் உங்களது காதுகளில் விழவில்லையா,தமிழர்கள் இனவாதிகள் அல்ல,எங்களது உரிமைகளையே கேட்கின்றோம்,தமிழ் தலைவரின் ஆளுமை வேண்டும் ,வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களுடன் எவ்வாறு இணைவது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.